×

உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை விட நாடாளுமன்றத்தின் அதிகாரமே உயர்ந்தது: குடியரசு துணைத் தலைவர் கருத்துக்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு..!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை விட நாடாளுமன்றத்தின் அதிகாரமே உயர்ந்தது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியிருப்பதற்கு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்று பேசினார். இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதி பரிபாலன முறையை விமர்சித்த தன்கர் 2012-ம் ஆண்டு கொலிஜியத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய நீதிபதிகள் நியாமன ஆணைய சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை விமர்சித்தார். நம் நாடு ஜனநாயக நாடுதானா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ப.சிதம்பரம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் புதிய மசோதாவை தாக்கல் செய்ய நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். தன்கர் இந்த பார்வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆபத்துகள் வந்துள்ளன என்பதற்காக எச்சரிக்கை விடுக்கும் சமிக்ஞை என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாடாளுமன்றம் தான் பெரியது என்று குடியரசு துணைத் தலைவரின் கூற்று தவறானது என்றும் அரசியலமைப்பு சட்டம் தான் பெரியது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற பெருபான்மை மூலம் அதிபர் ஆட்சி முறை கொண்டு வந்தாலோ, சட்டப்பேரவைகளில் உரிமை பறிக்கப்பட்டாலோ அந்த திருத்தங்கள் செல்லுமா என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Parliament ,Supreme Court ,P. Chidambaram ,Vice President , Supreme Court, Parliament, Republic, Deputy, President, P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி