×

தை பொங்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் நெல்லையில் மஞ்சள் குலைகள் விற்பனைக்கு குவிந்தன

நெல்லை :  பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் மஞ்சள் குலைகள் அறுவடை பணி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. மஞ்சள் குலை ஒன்றுக்கு ரூ30 முதல் 40 வரை என விற்பனை செய்யப்படுகிறது.தமிழர்  திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.  பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. புதுமண தம்பதியினருக்கு தலைப்  பொங்கல் படி வழங்குவது, தமிழர்களின் கலாச்சாரமாக திகழ்ந்து வருகிறது.

தலைப்  பொங்கல் படி கொடுப்பதற்காக கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு ஆகியவற்றின்  அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு  பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நெல்லை பகுதியில் தற்போது அறுவடை  செய்யப்படுகிறது. இதில் ஆண், பெண் தொழிலாளர்கள் மஞ்சள் குலை அறுவடை பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். கண்டியப்பேரி பகுதியில் அறுவடை தீவிரமாக நடைபெற்று  வருகிறது.

மஞ்சள் குலைகள் அறுவடைக்கு முன்பாக பாத்திகள் அமைத்து தண்ணீர்  தேக்கி வைக்கப்படும். இதனால் மஞ்சள் குலைகளை எடுப்பதற்கு எளிதாக  இருக்கும். இதைத் தொடர்ந்து மஞ்சள் குலைகளை தொழிலாளர்கள் பிடுங்கி எடுத்து  மோட்டார் மூலம் மற்றும் கால்வாய்களில் சுத்தமாக கழுவி எடுக்கின்றனர்.  அதன்பின்னர் வேர்களை நீக்கி, தனி மஞ்சள் குலைகள் மட்டும் விற்பனைக்காக   தரம் பிரிக்கப்படுகிறது.

மஞ்சளின் விளைச்சலைப் பொறுத்து பெரிய குலைகள்  ரூ.60க்கும், சிறிய குலைகள் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலை  பொங்கல்படி கொடுக்க இருப்பதால், மஞ்சள் குலைகளை  அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுபோல் நெல்லை  மாவட்டத்தில் பல ஏக்கர் பயிர் செய்யப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் அறுவடை  செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபடும் பெண்  தொழிலாளர்களுக்கு ரூ.500ம், ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.800ம் கூலி வழங்கப்படுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மஞ்சள் குலைகள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை எடுக்கப்பட்டபின் நெல்லை டவுன் ரதவீதிகள், கண்டிகைபேரி உழவர் சந்தை, பாளை மார்க்கெட், மேலப்பாளையம் உழவர் சந்தை, மகாராஜநகர் உழவர் சந்தைகளில் விற்பனை கொண்டு செல்லப்பட்டன. மார்க்கெட்களில் தலை பொங்கல் படி வியாபாரம் தற்போது களை கட்டியுள்ளது. பொங்கல் சீர் வரிசை கொடுப்பதற்காக மஞ்சள் குலைகள் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தாய்கிழங்கு கிலோ ரூ.50

மஞ்சள் குலைகள் பிடுங்கி எடுத்து சுத்தப்படுத்திய பின் அதனடியில் தாய் கிழங்கு இருக்கும். இந்த தாய்கிழங்கு பெண்கள், பெண் குழந்தைகளுக்கு குளிக்க பயன்படுத்துவது வழக்கம். இதனை வாங்கி வெயிலில் உலர்த்தி, காயவைத்த ஆரஞ்சு பழ தோல், ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து குளிக்க பயன்படுத்துவார்கள். இதற்காக மஞ்சள் குலைகள் அறுவடை நேரத்தில் தாய்கிழங்கு வாங்க பல பெண்கள் ஆர்வம் காட்டுவர். மஞ்சள் குலைகள் எடுக்கப்பட்டபின் அதனடியில் இருக்கும் தாய்கிழங்கை எடுத்து 20 நாட்கள் காயவைத்து கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Tai Pongal ,Nelli , Nellai: On the occasion of the Pongal festival, yellow gourds were harvested and sold in Nellai district.
× RELATED செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!!