×

பொங்கலுக்கு விற்பனைக்கு வந்த செங்கரும்புகள் ஒரு கட்டு ரூ.300 முதல் விற்பனை

சிவகங்கை :  பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தோன்றிய இப்பண்டிகையில் கரும்புக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் சிவகங்கை அருகே சாலூர், மலம்பட்டி, சிவல்பட்டி, சானிப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள் விளைவிக்கப்படுகின்றது.

பல்வேறு வகையான வெல்லம் தயாரிப்பது, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட தேவைகளுக்கே இந்த வகை கரும்புகள் பயன்படும். தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் அடுத்த பொங்கலுக்கான கரும்பு நடவு தொடங்கி விடுகிறது. மாசி மற்றும் பங்குனி மாதங்களில் நிலங்களில் கரும்பின் கரணை(வேர்ப்பகுதி) நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படு வருகிறது.

10 மாதங்களில் முழுமையாக வளர்ந்து கரும்புகள் அறுவடைக்கு தயாராகின்றன. இப்பகுதியில் தொடர்ந்து அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியான மழை இல்லாததால் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலமே கரும்பை விளைவிக்கின்றனர். இருப்பினும் கடந்த ஆண்டு போதிய மழை இருந்ததால் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்படவில்லை. இப்பகுதியில் விளையும் கரும்புகள் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

கரும்பு விவசாயிகள் கூறியதாவது, மாவட்டத்தில் சிவகங்கை தாலுகாவில் உள்ள இப்பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டுமே செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் ஆலைக்கரும்புகளே பயிரிடுகின்றனர். மழையை நம்ப முடியாததால் ஏராளமானோர் செங்கரும்பு விவசாயத்தை குறைத்து வருகின்றனர். மழை இல்லாமை, உரம், மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் அதிகப்படியான செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். குறிப்பிட்ட அளவிலான கரும்புகளை அரசு கொள்முதல் செய்தது. மற்றவற்றை வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம்.

ஒரு வண்டி கரும்பு(300கரும்புகள்) ரூ.5ஆயிரத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் கரும்புகளை பார்த்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். வியாபாரிகள் இந்த விலை கொடுத்து வாங்கி வாகன செலவு உள்ளிட்ட மற்ற அனைத்து செலவுகளையும் சேர்த்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். இதனால் ஒரு கட்டு கரும்பு ரூ.300க்கும் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படும். இப்பகுதியில் கரும்பு கத்தரி, வெண்டை, முள்ளங்கி, மிளகாய், தக்காளி உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அரசு சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Pongkal , Sivagangai: On the occasion of Pongal festival, a bundle of sugarcane is being sold from Rs.300. Pongal is celebrated on the first day of Thai month every year
× RELATED பொங்கலுக்குள் புதிய பேருந்து...