காரைக்கால் பள்ளியில் உலக சாதனை முயற்சி 500 மண்பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

காரைக்கால் : காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 500 பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அடுத்த பூவம் பகுதியில் அமைந்துள்ளது டி.எம்.ஐ செயின்ட் ஜோசப் குளோபல் தனியார் ஆங்கிலப்பள்ளி. இந்தப் பள்ளியில் மாணவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மண்பானைகளில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் விழாவை நேற்று கொண்டாடினர்.

இந்த வகையில் ரப்பா புக் ஆப் உலக சாதனை பதிவில் இடம்பெறுவதற்காக பள்ளி சார்பில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி 500க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைத்து அதற்கு மஞ்சள் மாலைகளை கொண்டு அலங்கரித்து, பச்சரிசி, வெள்ளம் இட்டு,முந்திரி திராட்சை ஆகியவை சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்தநிலையில் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரே இடத்தில் மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகர், சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் விழாவில் பள்ளி முதல்வர் அமலா கிறிஸ்டி, ராபா உலக சாதனை குழுவின் நிறுவனர் ராமானுஜ பிரசன்னா, ஆசிரியர்கள், பள்ளி அறக்கட்டளை குழுவினர், தேசிய தொழில்நுட்ப மையத்தின் கணிதத்துறை பேராசிரியர் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதுகுறித்து ராபா உலக சாதனை குழுவின் நிறுவன தலைவர் ராமானுஜ பிரசன்னா கூறியதாவது, மாணவர்களிடையே சிறு வயதிலேயே ஒற்றுமை மற்றும் மத, இன வேறுபாடு இன்றி பழகுவதை வலியுறுத்தும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியது பாராட்டுக்குரியது என கூறினார்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்களை பெற்றோர்களுடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட மண்பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கல் இட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடியது உலக சாதனையாக கருதி இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: