தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக்கும் திட்டம்-கிருஷ்ணகிரி நகராட்சியில் அறிமுகம்

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் முதல்முறையாக, கிருஷ்ணகிரி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக்கும் முன்மாதிரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், பல இடங்களில் குப்பைகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து குப்பைகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை, புகையில்லா எரிபொருளாக மாற்றும் முன்னோடி திட்டம் நகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து, நாளொன்றுக்கு சராசரியாக 28 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 40 சதவீதம் அதாவது 12 டன் பாலித்தீன், பிளாஸ்டிக் கவர் மற்றும் இதர கழிவுகளாக சேர்கிறது. மக்கும் குப்பைகளை உரமாக மாற்றினாலும், பொதுவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, குப்பை கிடங்குகளில் இருந்து பிரிக்க முடியவில்லை.

கிருஷ்ணகிரியில் உள்ள 3 குப்பை கிடங்குகளிலும் குப்பைகள் தேங்கியுள்ளன. இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளை புகை இல்லாத எரிபொருளாக மாற்றி, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப பரமக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனம் முன்வந்தது. இதனை தொடர்ந்து, தற்போது கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குப்பைகிடங்கில், இதற்கான இயந்திரங்களை அந்நிறுவனமே வழங்கி, 3 மாத முன்னோட்டத்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து பரமக்குடி குப்பை ஒழிப்பு நிறுவனத்தினர் கூறியதாவது:

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையில், தார் சாலை, பேவர் பிளாக் உள்ளிட்டவை செய்தாலும், அவற்றை ஒழிக்க எந்த முயற்சிகளும் முறையாக இல்லை. இதை தீர்க்கும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் இயந்திரத்தை கண்டறிந்து, கடந்த ஒன்றரை வருடங்களாக நடத்தி வருகிறோம். இதற்காக மத்திய அரசின் சுவச்பாரத் விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளோம். தமிழகத்தில் முதல்முறையாக, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு எங்கள் இயந்திரங்களை வழங்கி உள்ளோம்.

இங்கு பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்க, ‘ஷெட்டிங்’ மற்றும் ‘எக்ஸ்டிரூட் கம்ப்ரசர்’ இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். ‘எக்ஸ்டிரூட் கம்ப்ரசர்’ இயந்திரம், பிளாஸ்டிக் கழிவுகளை இறுக்கி, விறகு போன்று கொடுத்துவிடும். இதை டையிங் கம்பெனி, அரிசி ஆலை உள்பட பல்வேறு தொழிற்சாலைகளின் பாய்லர்களில் விறகு, நிலக்கரிக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அனுப்புகிறோம்.

இதனால் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து, புகையில்லா நகர், குறைந்த செலவில் எரிபொருள் உருவாக்க முடியும். தற்போது கடலூர் உள்ளிட்ட நகராட்சிகளில், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தி, பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிறுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: