×

அடிப்படை வசதியில்லாத நாகலாபுரம் நூலகம்-இடவசதியின்றி புத்தகங்கள் மூட்டை கட்டப்படும் அவலம்

விளாத்திகுளம் :  விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் புத்தகங்கள் மூட்டை கட்டி வைக்கும் நிலையில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விளாத்திகுளத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் நாகலாபுரம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் தெருவில் நாகலாபுரம் பஞ்சாயத்து கட்டிடத்தில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த நூலகம், 2013-14ம் ஆண்டு ரூ.47 ஆயிரம் செலவில் பராமரிப்பு செய்யப்பட்டது.

அதன் பிறகு பராமரிப்பு பணிகள், எதுவும் நடைபெறவில்லை. நூலகம் தொடங்கப்பட்ட போது உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தாலும், தற்போது 900க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் 25க்கும் மேற்பட்ட புரவலர்களும் உள்ளனர்.தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வேலைவாய்ப்பு இதழ்கள், மாத இதழ்கள், பொது அறிவு புத்தகங்கள், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசு புத்தகங்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், நூலகத்தில் உள்ளன. 25க்கும் மேற்பட்ட வாசகர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

ஆனால் இந்த நூலகத்தில் இருவர் அமர்ந்து படிக்கக் கூடிய அளவில் மட்டுமே இடவசதி உள்ளது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டு புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்றுதான் படித்து வருகின்றனர். காலை நாளிதழ்களை படிக்க வரும் பொதுமக்கள் நூலகத்திற்கு வெளியே நின்றுதான் படிக்க வேண்டியது உள்ளது.
புத்தகங்கள் வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதனை மூட்டை கட்டி வைக்க வேண்டிய அவலம் காணப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாசகர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நாகலாபுரம் ஊர்ப்புற நூலக வாசகர் வட்ட தலைவர் சுப்பையா கூறுகையில், ‘கடந்த 15 ஆண்டுகளாக இந்த நூலகத்துக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய புத்தகங்கள் நூலகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அந்த புத்தகத்தை நூலகத்தில் பராமரிப்பதற்கு போதிய ரேக் வசதிகள் மற்றும் இடவசதிகள் இல்லை.

நாகலாபுரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி அரசு கலைக்கல்லூரி போன்றவை உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நூலகத்திற்கு வந்து அமர்ந்து படிக்க முடிவதில்லை. பல்வேறு அரசு பணிகளுக்கு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், நாகலாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் உள்ளனர்.

அவர்கள் தமிழக அரசின் திட்டம் தொடர்பான புத்தகங்களையும், வேலைவாய்ப்பு இதழ்களையும் நாகலாபுரம் ஊர்ப்புற நூலகத்திற்கு வந்து அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி நாகலாபுரம் ஊர்ப்புற நூலகத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டிக் கொடுத்து கிளை நூலகமாக தரம் உயர்த்தி தர வேண்டும், என்றார்.

‘‘புதராக மாறியது’’

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூர் விலக்கு (அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில்) அருகே பார்க் வசதியுடன் கூடிய நாகலாபுரம் நூலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக புதிய நூலகம் கட்டுவதற்கான எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. புதிய நூலகம் கட்டுவதற்கான இடத்தில் தற்போது புதர்செடிகளும், முட்செடிகள் முளைத்து பயனற்று காணப்படுகிறது.

Tags : Nagalapuram library , Vlathikulam: In Nagalapuram near Vlathikulam, the village library is packed with books due to lack of basic facilities.
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...