×

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனி தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் வரவேற்பு..!!

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனி தீர்மானத்துக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் மீது சட்டப்பேரவையில் விவாதம் விவாதம் நடைபெற்று வருகிறது.

பாஜகவின் நயினார் நாகேந்திரன்: சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானத்தின் மீது பேரவையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசினார். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும். எங்களை விட யாரும் அதிகமாக மகிழ்ச்சி அடையமாட்டார்கள். ராமேஸ்வரம் கடற்பகுதி என்பது நீரோட்டம் அதிகமுள்ள பகுதி; அங்கு சில பிரச்சனைகள் உள்ளன. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம். ராமர் நடந்து சென்ற பாதைக்கு எந்த பாதிப்பும் சேது சமுத்திர திட்டத்தால் ஏற்பட கூடாது என்று கூறினார்.

ஜவாஹிருல்லா: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள சிறுதுறைமுகங்கள் வளர்ச்சி அடையும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாகும். இந்தியாவுக்கு கடல்சார் பாதுகாப்பு வலுவாக இருக்கும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.

ஈஸ்வரன்: சேது சமுத்திர திட்டம் வந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட்: தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் குறிப்பிட்டது.

விசிக ஷாநவாஸ்: இந்த காலத்தில் நிறைவேற்றவில்லை என்றால் எந்த காலகட்டத்தில் நிறைவேற்ற முடியும். முதலமைச்சர் போர் குணத்தோடு செயல்பட்டு வருகிறார் என  விசிக ஷாநவாஸ் கூறினார்.

செல்வப்பெருந்தகை: சேது சமுத்திர திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டம்.

ஓ.பன்னீர்செல்வம்: கடந்த காலங்களில் நிலைப்பாடுகள் மாறியிருக்கலாம்; அதுபற்றி தற்போது பேச வேண்டியதில்லை. சேது சமுத்திர திட்டத்தில் இருக்கும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அதை நிவர்த்தி செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன்: ராமர் என்ற கதாபாத்திரம் கற்பனையானது என்று அவையில் பதிவு செய்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ராமர் என்பவர் அவதார புருஷன் என பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் பாதிக்கப்படுவர். மீனவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களுக்கு அதிக அளவில் பயன்படக்கூடிய திட்டமாக இருந்தால் நிறைவேற்றலாம். மக்களுக்கு பயனுள்ள எந்த திட்டத்தையும் அதிமுக ஆதரிக்கும் எனவும் தெரிவித்தார்.


Tags : Chief Minister ,M.K.Stalin , Sethu Samudra Project, M.K.Stalin, Separate Resolution, Members welcome
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து