×

கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் தமிழ்நாட்டுக்கு 3 டிஎம்சியே கிடைத்துள்ளது

சென்னை:  ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர்  இதுவரை 3 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும்.

கண்டலேறு அணையில்  போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். இந்நிலையில்  தமிழக  அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள்  கோரிக்கை வைத்ததால் ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்தனர்.  இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த ஜூலை  மாதம்  வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தி 1500  கன அடியாகவும், பின்னர்  2 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர்  திறந்து  விடப்பட்டது.

 பின்னர், இந்த தண்ணீர் இரண்டு நாட்களுக்கு பிறகு  தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை  வந்தடைந்தது. மறுநாள் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சென்றடைந்தது. மேலும் தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு தற்போது 325 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.  இதனால் இதுவரை தமிழகத்திற்கு 3 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Krishna ,Kandaleru Dam ,Tamil Nadu , Kandaleru Dam, Krishna Neer, Tamil Nadu, 3 TMC
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...