×

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: இதுவரை 1.21 லட்சம் பேர் முன்பதிவு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இதுவரை 1,21,686 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022- 23”ஐ நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ.  25 கோடி உட்பட, ரூ. 47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சர் முதல் கையெழுத்திட்டார்.

அதன்படி www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து 1,21,686 முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.  1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழிவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

முன்பதிவு செய்திட கடைசி நாள் வரும் 17ம் தேதி ஆகும். எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல்  www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமும், தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு  ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Chief Minister's Cup Sports Tournament ,Sports Development Authority , Chief Minister Cup, Sports Tournament, Apply, 1.21 Lakhs Reservation
× RELATED பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்கம்