×

யார் ஆட்சியில் நீட் தேர்வு வந்தது? திமுக-அதிமுக காரசார விவாதம்

தமிழ்நாட்டில் யார் ஆட்சியின் போது நீட் தேர்வு நுழைந்தது என்பது குறித்து பேரவையில் நேற்று திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேப்பனஹள்ளி தொகுதி உறுப்பினர் கே.பி.முனுசாமி (அதிமுக) விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:  கவர்னரின் அவையில் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்திருக்கும் நேரத்தில், சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கருதுகிறேன். கவர்னர் உரையாற்றும் போது, முதல்வர் உள்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்திருக்கக் கூடாது.

சபாநாயகர் அப்பாவு: பேரவை விதி எண் 17-ஐ தளர்த்தி முதல்வர் பேச அனுமதி கேட்டார். இந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்றால் இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கும்.கே.பி.முனுசாமி: தீர்மானத்தை கொண்டு வர நான் அனுமதி கொடுக்கவில்லை என்றால் தலைகுனிவு என்று சொல்கிறீர்கள். எதனால் தலைகுனிவு ஏற்பட்டது?.
சபாநாயகர் அப்பாவு: இந்திய அரசியல் சட்டம் 163 (1)-ன்படி, அரசு எழுதிக் கொடுத்ததை வாசிக்கும் உரிமை மட்டுமே கவர்னருக்கு உண்டு.
கே.பி.முனுசாமி: எந்த திட்டத்துடனும் நாங்கள் வரவில்லை. அவை மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒருபுறம் விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்கிறார். மற்றொரு புறம் இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும் என்கிறார்.
உறுப்பினர் கே.பி.முனுசாமி: கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் பெரு வளர்ச்சி கண்டுள்ளது என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வளர்ச்சியிலும் 63.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால், இந்த 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது. எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகள், ஜெயலலிதா 16 ஆண்டுகள், எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களது ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த வளர்ச்சிக்கு மூல, முழு காரணம் அதிமுக தான்.
அமைச்சர் பொன்முடி: நீட் தேர்வை பொறுத்தவரை தலைவர் கலைஞர் இருந்த போது தமிழகத்தில் நுழையவிடாமல் தடுத்தார். அதுமட்டுமல்ல பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வே வரக்கூடாது என்று 2009ல் சட்டம் போட்டவர் கலைஞர். தாழ்த்தப்படவர்களுக்கு இடஒதுக்கீட்டை 2% அதிகரித்தவரும் கலைஞர் தான். திமுக ஆட்சியின் சாதனைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: ‘நீட்’ தேர்வு எப்போது வந்தது?. அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தார்கள். அந்தக் கூட்டணியில் இருந்தவர்கள் யார்.  
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்துக்குள் ‘நீட்’ தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர். ஜெயலலிதா இருந்தது வரை ‘நீட்’ தேர்வு வரவில்லை. யார் ஆட்சியில் நுழைந்தது. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) முதல்வராக இருந்த போது தான் ‘நீட்’ தேர்வு நுழைந்தது.
எடப்பாடி பழனிசாமி: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, 2010ம் ஆண்டு டிசம்பர் 22ம்தேதி ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது, திமுகவை சேர்ந்தவர் தான் ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எங்களையும் மீறி அப்போது வந்தது. அப்போது நாங்கள் ஒன்றிய அமைச்சரவையில் இருந்த போது கூட நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் இருந்த வரை, கலைஞர் முதல்வராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வை நாங்கள் நுழைய விடவில்லை.  கலைஞர், ஜெயலலிதா இருந்தது வரை ‘நீட்’ தேர்வு தமிழகத்துக்குள் நுழையவில்லை. உங்கள் ஆட்சியில் தான் வந்தது. உங்களால் ஏன் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை?.
எடப்பாடி பழனிசாமி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அது வந்தது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டாமா. அதற்கு பதில் சொல்லுங்கள்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: தமிழகத்தில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றவர் கலைஞர்.
எடப்பாடி பழனிசாமி: ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நாங்களும் வழக்கு தொடுத்தோம். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு இருக்கக் கூடாது என்பது தான் எங்களுடைய எண்ணம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, காலாவதியான சட்டத்தின் மூலம் வழக்கு தொடுத்தீர்கள். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதை ஏன் கடைசி வரை பேரைவையில் சொல்லாமல் மறைத்தது மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் சொல்லவில்லை. திருப்பி அனுப்பிய தகவலை கூட மறைத்த பெருமைக்குரியவர்கள் நீங்கள் தான்.  
எடப்பாடி பழனிசாமி: அந்த வழக்கை கூட நடத்தாமல் நீங்கள் வாய்தா வாங்கி வருகிறீர்கள். ‘நீட்’ தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார். ஆரம்பம் முதல் இறுதி வரை நாங்கள் எதிர்த்து வருகிறோம்.  
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: காலாவதியான சட்டத்தின் மூலம் பொழுதுபோக்குக்காக நீங்கள் வழக்கு தொடுத்தீர்கள்.
 எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நுழைந்ததற்கு காங்கிரஸ்- திமுக தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ‘நீட்’ தேர்வுக்கான வரைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கு திமுக  எதிர்ப்பு தெரிவித்தது. பாஜ ஆட்சியில் தான் ‘நீட்’ தேர்வு வந்தது.


Tags : NEET ,DMK ,ADMK , NEET examination came under whose rule? DMK-ADMK political debate
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு