திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சி புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(41). பால் வியாபாரியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியிலுள்ள மேஸ்திரிதோப்பு எனும் பகுதியில் பால் கொள்முதல் நிலையம் நடத்தி வந்தார். திமுக கிளை செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நாகேஷ் பால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரி வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், நாகேஷ் பால் லிட்டர் ரூ.26க்கு கொள்முதல் செய்ததும், அதே பகுதியில் வீடு வீடாக 15 ஆண்டுகளாக பால் கொள்முதல் செய்யும் 40 வயது மதிக்கத்தக்க வியாபாரி லிட்டர் ரூ.23க்கு கொள்முதல் செய்ததும் தெரியவந்தது. இதனால் பலர் நாகேஷிடம் பால் விற்றுள்ளனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தொழில்போட்டியில் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. எனவே சந்தேகத்தின்பேரில் நேற்று பால் வியாபாரி உட்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: