தூத்துக்குடி- இலங்கைக்கு 2 மாதத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து: துறைமுக சேர்மன் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று துறைமுக சேர்மன் ராமச்சந்திரன் அளித்த பேட்டி: தூத்துக்குடிக்கு  இந்தாண்டும் வழக்கம்போல சுற்றுலா பயணிகளுடன் பயணிகள் கப்பல் வந்து உள்ளது. இதேபோல் மேலும் பல சுற்றுலா கப்பல்கள், தூத்துக்குடிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நம் மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பொருளாதார பலன்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கொரோனா காலத்தில் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் மாலத்தீவு, ஈரான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்காக தற்காலிகமாக ஒரு முனையம் தயார் செய்து இருந்தோம். தற்போது இந்த முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையே நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பலை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது இரு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் 2 மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க  வாய்ப்பு உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: