×

குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை: உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ‘குறவர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த முத்து முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘குறவர் சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாசமான முறையில் குறவன் - குறத்தி ஆட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆபாச குறவன் - குறத்தி ஆட்டங்களை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படும் கலைகளில் ஒன்றாக குறவன் - குறத்தி ஆட்டம் உள்ளது. தங்களின் அறிவுத் திறனுக்கு ஏற்றவாறு தற்போதைய சமூக அவலங்கள், அரசியல் உள்ளிட்ட கருத்துக்களை தெரிவிப்பர். இந்த பழமையான கலை தற்போது மாற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. பாரம்பரிய கரகத்தின் பயன்பாடு குறைந்துள்ளது. இதுபோன்ற சூழலில் குறவர் சமூகத்தினர் மீது தவறான புரிதல் உண்டாகிறது. சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் உள்ளன. தங்களின் பயன்பாடு இல்லாத ஆட்டத்தில் அவர்களின் பெயரை பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்துகின்றனர்.

எனவே, ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில் குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பாக பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வகையில் நடத்தப்படும் ஆடல் - பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையிலோ, அவதூறு ஏற்படுத்தும் வகையிலோ  ஆடல் - பாடல் நிகழ்ச்சி இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் அளித்திடும் வகையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும். இதை சரிபார்த்து சம்பந்தப்பட்ட வீடியோவை அகற்றுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Kurava ,ICourt , Ban on performing dances and songs that denigrate the Kurava community: ICourt branch orders to take appropriate action
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு