×

முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு; பெரியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர்.! நியமனம், பதவி உயர்வு பெற்றவர்கள் அதிர்ச்சி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முக்கிய அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த நியமனங்கள் மற்றும் திட்ட பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இவற்றில் குறிப்பிடத்தக்க வகையிலான 13 குற்றச்சாட்டுகள் ெதாடர்பாக உடனடியாக விசாரணை நடத்த, விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் கொண்ட இக்குழு, 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விரைவில் அக்குழுவின் விசாரணை தொடங்க உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், முறைகேட்டில் ஈடுபட்டவர்களும், முறைகேடாக பணிநியமனம் மற்றும் பதவிஉயர்வு பெற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது:  பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. சமூகநீதி காவலரான பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், சாதி, சமயம் சார்ந்த நடவடிக்கைகளும், முறைகேடுகளும் தலைதூக்கியுள்ளன. பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் நியமனத்தை பொறுத்தவரை, ஓட்டப்பந்தயம் அடிப்படையில் உடற்தகுதி தேர்வு நடத்தப்படுவது கட்டாயம். ஆனால், அதுபோன்று எதுவும் நடத்தாமல், நேர்காணல் நடந்துள்ளது. அதேசமயம், தமிழக அரசின் 200 புள்ளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில், உடற்கல்வி இயக்குநர் மற்றும் நூலகர் பணியிடம் எஸ்சி(ஏ)., பிரிவிற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால், விதியை மீறி பொதுப்பிரிவில் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பதவிக்கு, சீனியர்களான தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 2 பேராசிரியர்களில் ஒருவரை நியமித்திருக்க வேண்டும். மாறாக ஜூனியரான, பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரமுகரின் சமுதாயத்தை சேர்ந்த, தமிழ்துறை தலைவர் பெரியசாமியை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்தனர். அதேசமயம் ஏற்கனவே இவர் மீது போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது, பிஹெச்டி படித்த காலத்திலேயே, பணிபுரிந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனை கண்டுகொள்ளாமல் சிண்டிகேட் உறுப்பினராக நியமித்ததுடன், `ஆதாயம் பெறும்’ ேநாக்கில் உதவிபெறும் கல்லூரிகளுக்கான உதவிபேராசிரியர் நியமன குழு பிரதிநிதியாகவும் முறைகேடாக நியமிக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடான பணிநியமனம் தொடர்பான கோப்புகள், திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து மாயமானது. அப்போது தற்கொலை செய்து கொண்ட பதிவாளர் அங்கமுத்து, தனது இறுதி கடிதத்தில் ராஜமாணிக்கம், நெல்சன் மற்றும் குழந்தைவேலு ஆகியோரது பெயரை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு முன்தேதியிட்டு, தவறான வழியில் பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன், பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்களுக்கான அமைச்சு பிரிவில் இருந்தவர், பேராசிரியர்களிடமே லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். பதிவாளராக பொறுப்பு வகித்த கணினி அறிவியல் துறைத்தலைவர் தங்கவேல், தொலைதூர கல்வி மையத்திற்கான சாப்ட்வேரை, தனது உறவினர் நிறுவனத்தில் முறைகேடாக கொள்முதல் செய்துள்ளார். உயர் கட்டமைப்பு திறன் கொண்ட கணினியை வாங்கியதாக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, அதில் குறைந்த கட்டமைப்பு திறன் கொண்ட கணினியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டார்.

மேலும், ஆட்டோமேசன் என்ற பெயரிலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் இவரே துறைத்தலைவராக ஒரு கோரிக்கை வைத்து, பொறுப்பு பதிவாளராக  அதற்கு ஒப்புதல் அளித்து, பின்னர் நிதி அலுவலராக இருந்து நிதிஒதுக்கீடு செய்த கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுதவிர நாக் அங்கீகாரம் பெறுவதற்காக மேற்கொண்ட பணிகளுக்கு போலி பில் சமர்ப்பித்தது, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான வாய்ப்பை தவிர்க்க, சுழற்சி அடிப்படையில் துறைத்தலைவர் பொறுப்பு வழங்காதது, கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மீதான  என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு விரைவாக விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : Periyar University , Formation of committee to investigate irregularities; Important officials are trapped in Periyar University. Appointed, promoted shocked
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...