×

காஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நெரிசல்; போக்குவரத்தை முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி சாலை, ரங்கசாமி குளம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம் ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் ராஜாஜி மார்க்கெட்டின் புதிய கட்டுமான பணி நடந்து வருகிறது.

இதனால் மார்க்கெட் தற்காலிகமாக ஓரிக்கைக்கு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பழக்கடைகள், பன்னீர், கரும்பு, பூக்கடைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ஏற்கனவே ராஜாஜி மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம், பழக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றும்படியும் மாநகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மேற்கண்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இவ்வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, மக்கள் நலனை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pongal Festive ,Kanchi , Pongal rush in Kanchi; Public demand for regularization of transport
× RELATED கருடன் கருணை