கோவையில் 1,206 பண்ணைகளில் சோதனை; பறவை காய்ச்சல் பாதிப்பு வந்தால் 6 மாத காலம் தாக்கம் இருக்கும்.! கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி தகவல்

கோவை: பறவை காய்ச்சலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் வந்தால் அதன் தாக்கம் 6 மாத காலம் இருக்கும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் அருகேயுள்ள பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள், கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துகள் திடீரென உயிரிழந்தன.

இதன் ரத்த பரிசோதனை போபாலில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. இதில், பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும், கோட்டயம் பகுதியிலும் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் கோழிப்பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

திடீரென கோழிகள் இறந்தால் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகள் மற்றும் பிற இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு கோழிகள் கொண்டு செல்ல தடையின்மை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு வந்தால் 6 மாத காலம் அதன் தாக்கம் இருக்கும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை கோவையில் எந்த பகுதியிலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்றார்.

Related Stories: