×

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்பு

சென்னை: பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி,  ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமானது போகி பண்டிகையை முன்னிட்டு சனவரி 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில்  உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 21.01.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Tags : Government ,People's Grievance Camp ,Tamil Nadu , Government announcement that people's grievances camp will be held every month in all circles across Tamil Nadu
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...