×

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு கடனுதவி: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

தண்டையார்பேட்டை: முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  10 ஆயிரம் கோடிக்கு மேல்  விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என  அமைச்சர் பெரியகருப்பன்   கூறியுள்ளார். சென்னை பூக்கடை பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை  மன்றத்தில், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும்  மத்திய கூட்டுறவு வங்கி  சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு  சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய வங்கி கடன்  வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மத்திய கூட்டுறவு வங்கி சங்க  தலைவர் பெரம்பூர் மகேஷ் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை  இயக்குனர் அமலதாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப் பாளர்களாக  தமிழ்நாடு  கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை   அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக்குழு  கடன் தள்ளுபடிக்கான  சான்றிதழ் வழங்கினார்.

இதில், ரூ.3 கோடிக்கு மேல் கடன்  வழங்கப்பட்டது. கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: மகளிர் சுய  உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் தேர்தல்  அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து  நடைமுறைப்படுத்தி வருகிறார். 251 குழுக்களுக்கு ₹4.98 கோடி கடன் வழங்கி  மகளிரின் இன்னலை போக்கியவர் முதலமைச்சர். கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தொழில்  செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் என்ற வாசகத்திற்கு இணங்க 18  குழுக்களுக்கு ₹1.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில்  452 பேருக்கு 3.18 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி,  நகைக்கடன் தள்ளுபடி என அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக்கூடிய ஒரே துறை  கூட்டுறவுத்துறை தான். இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் பெரியகருப்பன்  பேசியதாவது: கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இந்துசமய அறநிலையத்துறை எனக்கு  வழங்கப்பட்டது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுக்கு  வழங்கப்பட்டுள்ளது. அவர் அந்த துறையில் என்னைவிட சிறப்பாக பணியாற்றி  வருகிறார். மகளிர் சுய உதவிக்குழுவுக்கு விதைவிதைத்தவர் கலைஞர்.  தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கிய மகளிர் சுய உதவி குழு பெரிய அளவில்  செயல்படுவதற்கு கலைஞர்தான் காரணம். இன்று அது மிகப்பெரிய அளவில் வருவதற்கு  முதலமைச்சர்தான் காரணம். திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதுதான் மகளிர்  சுய உதவிக்குழு மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுத்தது. மகளிர் சுய உதவி  குழுக்களை ஊக்குப்படுத்தி திறன்பட செயலாற்றியவர்தான் அன்று அமைச்சராக இருந்த முதலமைச்சர். மகளிர்களின் பொருளாதாரம் உயர்வதற்கு 20 ஆயிரம் கோடி  வரை வங்கி கடன் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தார். ஆனால் நிர்ணயம்  செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக கடந்த 2022 ஆண்டு 21 ஆயிரம் கோடி கடன்  தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இவர்,  முதலமைச்சர்போல் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவரது பணி மிகவும்  சிறப்பாக உள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேறவேண்டும் என்று  எண்ணுபவர் முதலமைச்சர். கடந்த 10 ஆண்டு களில் விவசாய கடன்  வெறும் 6000  கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கிக்கடன்  வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகை 12 ஆயிரம் கோடி வரை எட்ட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில்,  கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி  ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டனர்.

Tags : Principal ,BSM ,Stalin ,Minister ,Periyakarappan , Over Rs 10,000 crore loan to farmers after M. K. Stalin's regime took over as Chief Minister: Minister Periyakaruppan's speech
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...