×

ஷனகாவை மன்கட் செய்து வெளியேற்ற விரும்பவில்லை; இன்னும் கொஞ்சம் நன்றாக பந்து வீசி இருக்கலாம்.! கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

கவுகாத்தி: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங்  செய்த இந்தியா 50 ஓவரில், 7விக்கெட் இழப்பிற்கு 373ரன் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 87 பந்தில், 12பவுண்டரி, ஒருசிக்சருடன் 113, கேப்டன் ரோகித்சர்மா 83 (67 பந்து,9 பவுண்டரி,3 சிக்சர்), சுப்மான்கில் 70 (60 பந்து), ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியில் கேப்டன் தசுன் ஷனகா நாட்அவுட்டாக 108 (88 பந்து, 12 பவுண்டரி,3 சிக்சர்), பதும் நிசங்கா 72 (80 பந்து), தனஞ்செயா டிசில்வா 47 (40 பந்து), ரன் அடித்தனர்.

50 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 67ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பவுலிங்கில் உம்ரான்மாலிக் 3, முகமதுசிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருதுபெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: ” நாங்கள் நன்றாக தொடங்கினோம். இவ்வளவு பெரிய ரன்களை குவிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் பங்களித்தால் மட்டுமே முடியும். மற்ற பேட்ஸ்மேன்கள் வந்து தைரியமாக ரன்களை குவிக்க ஆரம்பத்தில் அருமையான தொடக்கம் அமைக்கப்பட்டது. நாங்கள் இன்னும் கொஞ்சம் பந்து நல்ல முறையில் வீசி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பனி பிற்பகுதியில் குறைவாக இருந்த பொழுதும் கூட பந்துவீச்சு குறித்து நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை.

நாங்கள் ஒரு யூனிட் ஆக சிறப்பாகவே பந்து வீசினோம். இதுபோன்ற ஆட்டங்களில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும், என்றார். மேலும் ஷனகாவை ஷமி கடைசி ஓவரில் மன்கட் அவுட் செய்தது பற்றிய கேள்விக்கு, அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. திறமையான பேட்டரை, மன்கட் செய்து வெளியேற்ற விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான முறையிலேயே அவரை ஆட்டம் இழக்க வைக்க முயற்சி செய்தோம். அவருக்கு ஹாட்ஸ் ஆப்!”, என்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்க 2வது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Tags : Shanaga ,Rokitsarma , Shanaka didn't want to be kicked out; Could have bowled a little better. Captain Rohit Sharma Interview
× RELATED இந்திய வேகங்களின் அசத்தலான...