×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1கோடியை தாண்டிய வர்த்தகம்-களைகட்டிய கால்நடை விற்பனை

வேலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று கால்நடை விற்பனை களைகட்டியது. இதனால் ₹1 கோடிக்கு மேல் வர்த்தகம் தாண்டியதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டல்லடித்த பொய்கை மாட்டுச்சந்தையின் நிலவரம் கடந்த 3 வாரங்களாக சுமாரான நிலையை எட்டிய நிலையில், பொங்கலுக்கு முந்தைய சந்தை என்பதால் வழக்கத்தை விட நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது.

கால்நடைகள் விற்பனை தவிர பொங்கல் பண்டிகை என்பதால் கால்நடைகளுக்கான கயிறுகள், கழுத்து மணிகள், சங்குகள் கோர்த்த கயிறு, சிறிய அளவிலான பெயின்ட் டின்கள், அலங்கார பிளாஸ்டிக் வண்ண பூக்கள் என கால்நடைகளை அலங்கரிக்கும் பொருட்களின் வியாபாரமும் களைக்கட்டியது. இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ஏறத்தாழ ₹1 கோடியை தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 1500க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் சந்தையில் குவிந்தன. வர்த்தகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் வியாபாரம் படுஜோர்தான். கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. இதற்கு தீவனம் தாராளமாக கிடைப்பதும், பொங்கல் பண்டிகையும் காரணமாகும்’ என்றனர்.

போகி பண்டிகைக்கு சிறப்பு சந்தை

வரும் சனிக்கிழமை போகியும், அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகையும், திங்கட்கிழமை மாட்டுப்பொங்கலும், செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலும் வருவதாலும், அதை தொடர்ந்து காளை விடும் விழாக்கள் என்பதாலும் சனிக்கிழமை போகி பண்டிகை அன்று பொய்கையில் சிறப்பு மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு அங்கு ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.

Tags : Pongal feast , Vellore: Ahead of the Pongal festival, the sale of cattle in Vellore's next Poigai Cattle market was rampant yesterday. Thus ₹1
× RELATED பஞ்சாப் மாநில வங்கி கொள்ளை கதையில் அஜித்