நாட்டுக்கோழி வளர்ப்பில் மாதம் .50ஆயிரம் வருமானம் ஈட்டலாம்-வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்ற விவசாயி தகவல்

நீடாமங்கலம்  நாட்டுக்கோழி வளர்ப்பதால் மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் என்று வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்ற விவசாயி தகவல் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராயபுரம் என்ற கிராமம். இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(52) விவசாயி. இவரது இடத்தில் சுமார் 3 ஆயிரம் சதுரடியில் 500க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வகையான கருங்கோழி, அசீல் வகை கோழிகள் வளர்த்து வருகிறார்.

இந்த கோழி வளர்ப்பு குறித்து பாலசுப்ரமணியன் கூறுகையில், நாட்டு கோழி வளர்ப்பு முறையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்று தொடங்கினேன். அதிக கோழிகள் என்னிடம் இருந்தது. சில கோழிகள் இறந்து விட்டது. தற்போது 500 கோழிகள் என்னிடம் உள்ளது. இந்த கோழிகளுக்கு தீவனமாக முருங்கை கீரை, சாரணி கீரை, அரிசி போன்றவைகளை விரும்பி கொத்தி தின்னும்.

கருங்கோழி ஒரு கிலோ ரூ.600க்கும், நாட்டுக்கோழி கிலோ.ரூ.450க்கு தொடர்ந்து விற்பனையாகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை தடுப்பூசியும், கண் மற்றும் மூக்கிற்கு மருந்தும் என மூன்று மாதத்திற்கு ஒருமுறை சரியாக கவனித்தால் நோய் வராது. கோழியின் முட்டையும் விற்பனை செய்யப்படுகிறது. முதன் முதலில் 50 குஞ்சுகள் மட்டும் வாங்கி வளர்த்தேன். தற்போது 500 கோழிகள் உள்ளது. கோழிகள் அதிகம் விற்பனையாகிறது. கோழிகள் குறைந்தால் கோழியிடும் முட்டைகளை குஞ்சு பொறிப்பான் மூலம் குஞ்சுகளை பொறித்து விற்பனை செய்யப்படுகிறது.

நான் விவசாயி என்பதால் வீட்டை சுற்றி வயல்கள் உள்ளது. அதில் நெல், பருத்தி, கடலை சாகுபடி செய்து வருகிறேன். கோழி வளர்ப்பில் என்னால் அதிக கவனம் செலுத்த முடிய வில்லை, இருந்தாலும் இருக்கும் கோழி மற்றும் முட்டை விற்பனையால் தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. முழு நேரமாக நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் பெறலாம் என்றார்.

Related Stories: