×

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..!

சென்னை: பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விருகம்பாக்கம் சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய முதல்வர்; விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும்.

அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன்; நான் ஓடி, ஒளிய மாட்டேன், பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று சொன்னேன். 31-12-2022 அன்று இரவு 10-45 மணிக்கு பெண் காவலர் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4-ன்கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர்  விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 3-1-2023 இரவு 10-00 மணிக்கு கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் 4-1-2023 அன்று காலையே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

புகார் கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களைக் கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற அந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன். எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைகழித்த ஆட்சிதானே அ.தி.மு.க. ஆட்சி. இந்த அரசைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், ஒட்டுமொத்தமாக, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னார்.

* இராமநாதபுரம், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு விழாவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் மரணம், யாருடைய ஆட்சியில்?  
* தேவர் ஜெயந்தி விழாவில் மதுரையில் வெடிகுண்டு வீச்சு - 4 பேர் மரணம்.
* சிவகங்கை, திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படுகொலை 2012 இல் செய்யப்பட்டது.
* கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது…
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில்தானே?

* கூடங்குளம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்துச் சென்றது, அவரது கைத்துப்பாக்கி காணாமல் போனது.
* அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா?
* வன்னியர் சங்க மாநாட்டைத் தொடர்ந்து எழுந்த சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையில் நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைத்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்
* ஜல்லிக்கட்டு அனுமதிக்கு அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினரே தீயிட்டு கொளுத்தியதும் அ.தி.மு.க ஆட்சியில்தான்.
* சாத்தான்குளத்தில் லாக்கப் வன்முறை, காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அ.தி.மு.க ஆட்சியில்தான். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிய, அவருடைய குற்றச்சாட்டுக்கு இதையே பதிலாகச் சொல்லி நான் அமைகிறேன் இவ்வாறு பதிலளித்தார்.


Tags : Chief of Legislation ,Chief Minister of the Law ,G.K. Stalin , Strict action will be taken against whoever commits crimes against women: Chief Minister M. K. Stalin's reply in the Legislative Assembly..!
× RELATED ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10...