பாலமேடு, அலங்காநல்லூரில் வீரர்கள் ஆன்லைன் பதிவு துவக்கம்

அலங்காநல்லூர் / அவனியாபுரம்  பாலமேடு, அலங்காநல்லூரில் வீரர்கள் ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது. அவனியாபுரத்தில் மேயர் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரமாண்ட திடலில், 2 ஆயிரம் அடி தூரம் வரை பார்வையாளர்கள் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே பார்வையாளர்கள் அமரும் கேலரி உள்ளது.

ஆனாலும், பல்லாயிரக்கணக்கானோர் வர வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்த கமிட்டி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக பணிகள் நடந்து வந்தன. 3 அடி இடைவெளியில் 2 கம்புகளுக்கு இடையில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இத்தோடு இரும்பு பேரிகார்டுகள் வீரர்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பணிகள் நிறைவடைய உள்ளன.

வாடிவாசல் மைதானம், பார்வையாளர் மேடை, காளைகளை பிடித்து செல்வதற்கு தேவையான கலெக்சன் பாயிண்ட் பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பணிகளை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம் பார்வையிட்டு வருகிறது. நேற்று பணிகளை பேரூராட்சி மாவட்ட இணை இயக்குனர் சேதுராமன், செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி மன்ற தலைவர் சுமதி பாண்டியராஜன். துணைத்தலைவர் ராமராஜ் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டு பணிகளை முடுக்கி வைத்தனர்.

இதேபோல அலங்காநல்லூரிலும் நேற்று தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.மேலும், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள வீரர்களின் முன்பதிவும் நேற்று பகல் 12 மணிக்கு துவங்கியது. வீரர்கள் ஆர்வமுடன் தங்களது ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களுடன் பதிவு செய்தனர். தேர்வான வீரர்களுக்கு பிடிஎப் பார்மேட்டில், அவரவர் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை பதிவிறக்கம் செய்து போட்டியின்போது வீரர்கள் காட்ட வேண்டும்.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15ம் தேதி பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாடுகள் சேகரிக்கும் இடம் ஆகியவற்றை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் மதுரை மாநகர் காவல் துறை துணை ஆணையர் சாய் பிரணித் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், பணிகளை துரிதப்படுத்தவும் உத்திரவிட்டனர்.

Related Stories: