×

மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டியது பொங்கல் பண்டிகைக்கு ஆடுகள் விற்பனை அமோகம்-கரிநாள் கொண்டாட்டத்திற்காக போட்டி போட்டு வாங்கினர்

நெல்லை : பொங்கல் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை களைக்கட்டியது. வெளியூர்களில் இருந்து வந்த பலர் ஆடுகளை மொத்தமாக விலை பேசி வாங்கிச் சென்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாளான கரிநாள் எனப்படும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஆடுகளை வெட்டி வீடுகளில் விருந்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் பொங்கலுக்கு மறுதினம் ஆடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

கிராமங்களில் ஆடுகளை வெட்டி பங்கு வைக்கும் ஆட்டு வியாபாரிகள் சந்தைகளில் குவிந்து இப்போதே தங்கள் தேவைக்கேற்றபடி தரமான ஆடுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தென்மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பொங்கல் விற்பனை நேற்று களைக்கட்டியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் வியாபாரிகளும் இச்சந்தையில் பங்கேற்று நேற்று ஆடு, மாடுகளை வாங்கிச் சென்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சந்தையில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.1500 தொடங்கி ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் வரை சந்தையில் விற்கப்பட்டன.சில வாட்டசாட்டமான வெள்ளாடுகள் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் விலை போயின. ெபாங்கல் பண்டிகையை ஒட்டி செம்மறி ஆடுகளை விட வெள்ளாடுகளை பலர் குறி வைத்து விலை பேசினர். கிராமங்களில் கரிநாளான்று வெள்ளாட்டு கறிக்கு தனி மவுசு என்பதால், வெள்ளாடுகள் விலை குறித்து அதிகளவில் பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அவற்றின் விலை தாறுமாறாக இருந்தது. எனினும் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

சந்தை வியாபாரம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை ஒட்டி கறியுள்ள ஆடுகள் நல்ல விலைக்கு போகிறது. ெபட்டை ஆடுகளை விட, கிடாக்களுக்கு நல்ல விலை காணப்படுகிறது. வீடுகளில் வளர்ப்புக்கு ஒரு பொடி குட்டியின் விலையை கூட ரூ.1800 ஆக உயர்த்தி விட்டனர். கடந்த வாரம் ரூ.1000 என வாங்கிச் சென்ற குட்டிகள் இன்று அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

மார்கழி மாதம் முடியும் நிலையில் அடுத்த வாரம் முதல் சந்தையில் வெள்ளாடு, செம்மறியாடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.’’ என்றனர். மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு வெளியே நேற்று நாட்டுக் கோழிகளின் விற்பனையும் சூடுபிடித்தது.

Tags : Melapalayam Livestock Market ,Pongal Festival ,Amogam-Karinal celebration , Nellai: On the occasion of Pongal festival, sale of goats in Melapalayam market was stopped yesterday. Many came from out of town
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா