மேட்டூர் அருகே மலை கிராம தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட வாலிபர்-போலீசார் கைது செய்தனர்

மேட்டூர் : மேட்டூர் அருகே பாலமலையில் தோட்டத்தில் 500 கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் பாலமலை ஊராட்சியில் செங்குத்தான மலை உச்சியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு செல்ல சாலை போக்குவரத்து வசதி கிடையாது. மலைப்பாதை வழியே நடந்தே செல்ல வேண்டும். இதனால், இங்குள்ள மலைக்கிராமங்களில் சிலர் ரகசியமாக தோட்டங்களில் கஞ்சா பயிரிட்டு வருகின்றனர். அவ்வப்போது மேட்டூர் போலீசார், சோதனையில் ஈடுபட்டு கஞ்சாவை அழித்து, பயிரிட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலமலை கடுக்காய்மரத்துக்காட்டில் விவசாய தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ேமட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று பாலமலைக்கு நடந்து சென்றனர். அங்கு கடுக்காய்மரத்துக்காட்டு பகுதியில் பெருமாள் மகன் தனபால் (28) என்பவர், தனது விவசாய தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

அங்கே சுமார் 500 கஞ்சா செடிகள் இருந்தன. ஆங்காகே துணியை கட்டி மறைத்து இக்கஞ்சா செடிகளை தனபால் வளர்த்து வந்துள்ளார். 100 கிலோ எடை கொண்ட அந்த கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து, கஞ்சாவை விற்பனைக்காக பயிரிட்ட தனபாலை கைது செய்தனர். அவர் மீது கொளத்தூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தனபால், யாருக்காக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர். மலை கிராம விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றி அழித்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: