×

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது..!

வாஷிங்டன்: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன் சார்பில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இந்த விருதுக்கு ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது.

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்று அசத்தியுள்ளது. ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் என ஒட்டுமொத்த படக்குழுவும் விழாவில் பங்கேற்றிருந்த நிலையில் விருது அறிவிக்கப்பட்டதும் அனைவரும் கத்தி ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி விருதை பெற்றுக்கொண்டார். ஆஸ்கர் விருதுக்கான போட்டி பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் உள்ள நிலையில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த மார்ச் 25ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Golden Globe award for country song featured in RRR film..!
× RELATED அதிரடியாக குறைந்த தங்கம் விலை:...