×

கலவரத்தை உருவாக்க முயற்சி ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்பாடு மற்றும் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாகப்பட்டினத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டில் அரசை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை ஆளுநர் கையாண்டு வருகிறார். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். அவர் சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை ஏன் ஆதரித்து பேசுகிறார் என்பது புரியவில்லை’ என்று தெரிவித்தார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை திருவிழாவுக்கு வந்த அழைப்பிதழில், ‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி’ என இருந்தது. தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னம் இருந்தது. பொங்கல் விழாவுக்கு வந்த அழைப்பிதழில், ‘தமிழக ஆளுநர்’ என்றும், ஒன்றிய அரசின் முத்திரைச் சின்னமும் இருக்கிறது. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதே வேகத்தோடு, மாநிலத்தை விட்டும், ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார். அவரது மற்றொரு டிவிட்டில், ‘‘நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்த ஆளுநர் மறுத்துள்ளார்.

இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோஷப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு வரம்பு மீறிய செயலாகும். தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும். ஒன்றிய அரசு, தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளார்.  




Tags : Governor , Efforts to create riots should recall Governor: Leaders insist
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...