சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருவதால், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையின் போது, தமிழ்நாடு, அரசியல் தலைவர்கள் பெயர்களை புறக்கணித்தார். இதனால், தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகள் நடந்து வருகிறது. அதேபோல், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
வழக்கமாக கவர்னர் மாளிகை முன்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் அறிவிப்பதால் வழக்கத்திற்கு மாறாக, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கவர்னர் மாளிகை அருகே தடுப்புகள் அமைத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கவர்னர் மாளிகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
