முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சட்டப்பேரவை கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில், சட்டப்பேரவை கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் தமிழக அரசின் சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதே நேரத்தில், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து பாமகவினரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மற்றும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும், மேலும் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக சென்று விளக்க வேண்டும், தொகுதி மக்கள் என்ன தேவை என்று நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: