×

ரோகித் 83, கில் 70, விராத் 113 ரன் விளாசல் 67 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 67 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பரசபாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்குள்ளானது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 19.3 ஓவரில் 143 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கில் 70 ரன் (60 பந்து, 11 பவுண்டரி), ரோகித் 83 ரன் (67 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். விராத் கோஹ்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... ஷ்ரேயாஸ் அய்யர் 28, கே.எல்.ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 14, அக்சர் படேல் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 45வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் 113 ரன் (87 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஜிதா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெண்டிஸ் வசம் பிடிபட்டார். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது. ஷமி 4, சிராஜ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். அவிஷ்கா 5 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில்வெளியேற, அடுத்து வந்த குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார். அசலங்கா 23 ரன் எடுத்து உம்ரான் வேகத்தில் விக்கெட் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டார்.

ஓரளவு தாக்குப்பிடித்த நிசங்கா - தனஞ்ஜெயா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது. தனஞ்ஜெயா 47 ரன், நிசங்கா 72 ரன் (80 பந்து, 11 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, இலங்கை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. கேப்டன் ஷனகா ஒரு முனையில் போராட... ஹசரங்கா 16, துனித் 0, கருணரத்னே 14 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஷமி வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி விளாசிய ஷனகா சதத்தை நிறைவு செய்ததுடன், கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அமர்க்களப்படுத்தினார். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்து 67 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஷனகா 108 ரன் (88 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), ரஜிதா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் உமான் 3, சிராஜ் 2, ஷமி, ஹர்திக், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.

Tags : Rohit ,Gill ,Virat ,India , Rohit 83, Gill 70, Virat 113, India won by 67 runs.
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும்...