×

 ருதுராஜ் அபார சதம் மகாராஷ்டிரா ரன் குவிப்பு

புனே: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மகாராஷ்டிரா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன் குவித்துள்ளது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசியது. ருதுராஜ் கெயிக்வாட், சித்தேஷ் வீர் இருவரும் மகாராஷ்டிரா இன்னிங்சை தொடங்கினர். சித்தேஷ் 9 ரன், ராகுல் திரிபாதி 7 ரன்னில் வெளியேறிய நிலையில், ருதுராஜ் - கேதார் ஜாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. கேதார் 56 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் அங்கித் பாவ்னே 45 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

சவுரவ் நவாலே 5, அஷய் பால்கர் 11 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய ருதுராஜ் சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக நின்று அரை சதம் அடித்த அஸிம் காஸி காயம் காரணமாக வெளியேறி சவுரவ், அஷய் விக்கெட் வீழ்ந்ததும் மீண்டும் களத்துக்கு திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் மகாராஷ்டிரா 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன் குவித்துள்ளது. ருதுராஜ் 118 ரன், அஸிம் காஸி 87 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு பந்துவீச்சில் விக்னேஷ் 2, வாரியர், சாய் கிஷோர், விஜய் ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

பிரித்வி இரட்டை சதம்: கவுகாத்தி அமிங்கவோன் மைதானத்தில் அசாம் அணிக்கு எதிராக நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 397 ரன் குவித்துள்ளது. முஷீர் கான் 42, அர்மான் ஜாபர் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 240 ரன், கேப்டன் அஜிங்க்யா ரகானே 73 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 2ம் நாளான இன்று மும்பை அணி இமாலய ஸ்கோர் அடித்து டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ruduraj ,Maharashtra , Ruduraj's massive century is Maharashtra's run-scoring
× RELATED ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது...