ஒட்டாவா: இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக ராஜபக்சே சகோதரர்கள் கனடாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை போர் நடந்தது. இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக இலங்கை அதிபர்களாக இருந்த கோத்பய ராஜபக்சே, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே மீது இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் கனடா அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் சுனில் ரத்நாயக, லெப்டினன்ட் கமாண்டர் சந்தனா பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் எந்தவித பொருளாதார தொடர்பை கனடாவில் வசிக்கும் யாரும் வைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.