×

தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (9.1.2023) தலைமைச் செயலகத்தில், கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கனிம வளங்களை விஞ்ஞான ரீதியாக சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம், சுரங்கப்பணி மேற்கொண்டு, அதன் மூலம் பல்வேறு உபதொழில்கள் தொடங்கி தொழில்வளத்தை பெருக்கவும், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையாகும்.

கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்களுக்கோ, அரசிற்கு சொந்தமான அல்லது கட்டுப்படுத்தப்படுகிற நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் அரசால் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனமும் இணைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (Ilmenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தி துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும்.

Tags : Tamil Nadu Mineral Corporation ,IREL ,Chief Minister ,Treaty ,Stalin , Agreement between Tamil Nadu Mineral Corporation and IREL in presence of Chief Minister M. K. Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...