×

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை, அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சனை: எண்ணித் துணிக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் உரை

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் நடத்தும் உத்வேகமூட்டும் எண்ணித் துணிக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அப்போது, தமிழ்நாட்டில் நடக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டால் உதாரணமாக ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து கேட்டால் என்று பேசிய ஆளுநர், ஜல்லிக்கட்டு கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை. பல ஆண்டுகளாக நடக்கும் நடைமுறை அது. நாம் அதை முறைப்படுத்த வேண்டும் என்றால் விலங்குகளை காயப்படுத்தாத வண்ணம், பாதுகாப்பாக நடத்த முயற்சி எடுக்கலாம் என்றார்.

மாணவர் கேள்வி: மாநில, ஒன்றிய அரசுகளிடையே இருவேறு கருத்துகள் நிலவும்போது,   கருத்து கேட்கப்பட்டால் ஐஏஎஸ் அதிகாரி யார் பக்கம் நிற்க வேண்டும்
ஆளுநர் பதில்: மாநில அரசு, ஒன்றிய அரசு என்று வரும்போது. சந்தேகமே இல்லை, ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் ஒன்றிய அரசின் மூலம், ஒன்றிய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

மாணவர் கேள்வி: பணமதிப்பிழப்பு நல்லதா, கெட்டதா
ஆளுநர் பதில்: உச்சநீதிமன்றம் சொன்ன சட்டப் புள்ளியை நீங்கள் பார்த்தால் அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல இ-காமர்ஸ்கள் வந்துள்ளன.  ஒரு முடிவை எடுக்கும்போது சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும். உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா இப்போது உள்ளது

மற்றொரு கேள்விக்கு, ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சனை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும்போது தான் அது பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு பிரச்னை பற்றி தமிழ்நாட்டைத் தாண்டி யாருக்கும் தெரியாது. இந்தியா என்பது பல கலாச்சாரம், பல இனக் குழுக்கள் உள்ள நாடு. இதில் எந்தப் பகுதியிலும் ஒரே இனத்து மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி, அந்தப் பகுதியை அவர்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியாது என்றார்.

இந்தி மொழியை கற்பது குறித்த கேள்விக்கு, இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. எந்த மொழியும் கற்பதில் தவறில்லை. அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக்கொள்வது பயன்படும். தமிழ்நாட்டில் இரு மொழிகொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வேறு ஒரு பிராந்திய மொழியை படித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன். அது இந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றார்.

Tags : Union Government ,Governor ,Enni Dataka , There is no mistake in calling it a Union Government, Ennithaka Discussion Program, Governor's Speech
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்