ஓபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!: இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை பொதுக்குழு அங்கீகரித்தது..சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் வாதம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி வாதத்தை தொடங்கியுள்ளார்.

பொதுக்குழுவுக்கு அதிகாரம்: பழனிசாமி தரப்பு

ஒன்றரை கோடி தொண்டர்கள் மூலம்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும், அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்தரப்பு கூறுகிறது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்ல நேரிடும். அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது மிகவும் சிரமம் என்பதால்தான் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவே விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளிமாநில தொண்டர்கள் கூட அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இரட்டை தலைமையால் கட்சிக்கு பாதிப்பு:

இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், ஒரு முடிவு எடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும். அதிமுகவில் இரட்டை தலைமை என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. கட்சியை வழிநடத்தவும் முடிவு எடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது என்ன வழிமுறை பின்பற்றப்பட்டதோ அதுவே தற்போது பின்பற்றப்பட்டது. ஒருங்கிணையாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறவில்லை.

ஒருங்கிணையாளர்கள் பதவிகள் உருவாக்கியபோது தொண்டர்களிடம் செல்லாத பன்னீர்செல்வம், தற்போது செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம்:

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதுடன் அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அடிப்படை  தொண்டர்களால் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுக விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால் அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் முகமாகத் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். 2 பதவியை உருவாக்கியபோது எதிர்க்காத பன்னீர்செல்வம் தற்போது தொண்டர்களிடம் செல்ல கூறுகிறார். பொதுக்குழுவுக்கான அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடப்பட்டது.

இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை பொதுக்குழு அங்கீகரித்தது:

ஓ.பி.எஸ். தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்? என பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. ஜூலை 11 பொதுக்குழுவில் 2460 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்தனர்.

94.5 சதவீதம் உறுப்பினர்கள் ஆதரவு: பழனிசாமி

பொதுக்குழுவில் 94.5 சதவீதம் உறுப்பினர்கள் பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக்கி உள்ளனர். பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை: விவாதிக்க இருந்தது ஓ.பி.எஸ்.க்கு தெரியும்

பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும்; இதை அவர் மறுக்க முடியுமா? என எடப்பாடி பழனிசாமி தரப்பு கேள்வி எழுப்பியது. ஜூன் 23ம் தேதி கூட்டத்தில், கையெழுத்தாகிய பொதுக்குழு அறிவிப்பில் 3 - 7 வரையிலான தீர்மானங்கள் ஒற்றைத் தலைமை பற்றிய விவாதம் குறித்தவையாகும். இந்த விஷயம் அனைவருக்குமே தெரியும் நிலையில், ஒற்றைத் தலைமை ஆலோசனை இல்லை என பன்னீர்செல்வம் மறுப்பது நகை முரண்.

நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது ஓ.பி.எஸ். தரப்புக்கு ஒரு பிரச்சனை அல்ல. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இல்லாமலே ஜூலை 11 கூட்டத்தை அவைத்தலைவர் அறிவித்தார் என்பதுதான் பன்னீர் தரப்பு பிரச்சனை. ஜூலை 11 கூட்டத்தில் பதவிகள் நீக்கப்பட்டுவிட்டதால் அவை அன்றோடு முடிந்துவிட்டன; மேலும் 4 ஆண்டுகள் பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை. என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.  

ஏற்கனவே இருந்த பதவிதான் கொண்டுவரப்பட்டுள்ளது:

இரண்டு பதவிகளை எடுத்துவிட்டு ஏற்கனவே இருந்த பொதுச் செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது. அதிமுகவில் இல்லாத ஒரு பதவியை கொண்டுவரவில்லை. அதிமுக பொதுக்குழுவிற்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்பது பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். தற்போது இருக்கக்கூடிய பொதுக்குழு, செயற்குழுவை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைந்தே உருவாக்கினர். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது தான் உருவாக்கிய ஒரு பொதுக்குழுவையே ஓபிஎஸ் குறை கூறுகிறார். அதிமுக பொதுக்குழுவை நான் கூட்டியது போல் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். 5ல் 4 சதவீதம் பேர் விருப்பப்பட்டுதான் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது என வாதிடப்பட்டது.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்ததை ஓபிஎஸ் செய்தார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்ததை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் செய்தனர் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று ஓபிஎஸ் தரப்பினர் ஆவணங்களை எடுத்து சென்று விட்டனர் என ஈபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவு பெற்றது. அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது. உச்சநீதிமன்த்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்தது. அதிமுக தலைமை அலுவலகம், அதிமுக தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் சார்பாக நாளை வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.

Related Stories: