
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிக செயலை கண்டித்து தனி நபர் தீர்மானம் கொண்டுவரப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் அநாகரிகமாக நடந்துகொண்டார். ஆளுநருக்கு எதிரான காங்கிரஸின் தனிநபர் தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம். ஒன்றிய அரசில் மோடி செய்வதை, தமிழ்நாட்டில் அவரது வாரிசான ஆளுநர் ரவி அதை செய்து வருகிறார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடியும் முன்பே பேரவையை விட்டு ஆளுநர் பாதியில் வெளியேறிவிட்டார்.
பேரவை வரலாற்றில் இல்லாத மோசமான கலாச்சாரத்தை ஆளுநர் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இதுவரை எந்தவொரு ஆளுநரும் அவையின் மாண்பை மீறியதே இல்லை. ஆளுநரை தமிழ்நாடு மக்கள் புறந்தள்ள வேண்டும். தமிழ்நாடு ஆளுநரின் செயல் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து கலவரத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இதுபோன்ற அநாகரிகமான ஆளுநரை, ஆளுநர் மாளிகை பார்த்தது இல்லை. ஆளுநரின் போக்கை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என கூறினார். மேலும் பாஜக உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறது எனவும் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.