×

தை மாதம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளது பொங்கல் மண் பானை விற்பனை படுஜோர்-விலை குறைவால் மக்கள் ஆர்வம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காட்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் குறிப்பாக முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் பானை சட்டி மட்டுமின்றி விதவிதமான அகல்விளக்கு, மண் அடுப்பு, குடிநீர் ஜாடிகள், திருஷ்டி பொம்மைகள் மற்றும் சிறு சிறு சுவாமி சிலைகள் தயார் செய்கின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்களை ஆலங்காடு படித்துறை முதல் திருவள்ளுவர் சிலை வரை கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர். இதனால் நெடுந்தூரத்தில் இருந்து வாகனங்களில் வரும் வெளியூர் மக்கள் இதனை கண்டு நிறுத்தி வாங்காமல் சென்றதில்லை.இந்நிலையில் இப்பகுதி மண்பாண்டக்கலை தொழிலாளர்கள் பாரம்பரியமாக இத்தொழில் நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு பகலாக உழைக்க வேண்டியுள்ளது. சமையலறையை எப்போது உலோக பாத்திரங்கள் ஆக்கிரமிக்க துவங்கியதோ அப்போதிலிருந்தே மண்பாண்ட தொழில் சரிய ஆரம்பித்துவிட்டது.

ஆரோக்கியத்திற்கு கெடுதலென தெரிந்தும்கூட அலுமினிய பாத்திரங்களை யாரும் தவிர்ப்பதாயில்லை. உடல் நலத்திற்கு பாதுகாப்பானது என்று உணர்ந்தும்கூட இ
ந்த மண்பாண்டங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆனால் கிராமங்களில் மட்டுமே மண்பாத்திரங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளன. தற்பொழுது மண்பானை உற்பத்தியாளர்கள் குறைவாக இருந்தலும், விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். ஆங்காங்கே பல்வேறு தொழில் செய்பவர்கள் கூட இந்த மண் பாண்டங்களை விற்க துவங்கி விட்டனர். இதனால் உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யும் இவர்களுக்கு இந்த வருடம் வியாபாரம் ரொம்ப குறைவு என்கின்றனர். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் இந்த மண்பாண்டங்கள் மீது அனைத்து தரப்பினரின் கண்களும் படும். அதேபோல் சோறு, கறி குழம்பு எதுவானாலும் மண்பானை சட்டியில் சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்.

இரண்டு நாட்கள் ஆனாலும் சுவை கூடுமே தவிர கெட்டுப்போக வாய்ப்பில்லை. மண்பாண்ட தொழிலில் பல்வேறு சிரமங்கள் இருந்தும் முத்துப்பேட்டை பகுதி தொழிலாளர்கள் தளராத மனதுடன் பொங்கலை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி சென்றாண்டுகளை போலவே விதவிதமான மண்பாண்டங்களை தயார் செய்து, சாலையோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் வியாபாரம் ரொம்ப டல்லாக இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் இப்பகுதியில் கார் மற்றும் வாகனங்களில் செல்லும் குறைவான எண்ணிக்கையில் வெளியூர் மக்கள் வந்தாலும் அவர்கள் வாகனங்களை சட்டென நிறுத்தி ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.

பானை ரூ.250 சட்டி ரூ.150

இதுகுறித்து தொழிலாளி மேகநாதன் கூறுகையில்: பொங்கலை எதிர்பார்த்து இரவு பகலாக கண்விழித்து தயார் செய்து விதவிதமாக அடுக்கி வைத்துள்ளோம். பொங்கல் பானை ரூ.100 முதல் 250ரூபாய் வரை உள்ளது. சட்டி 100 முதல் ரூபாய் 150வரை உள்ளது. அடுப்பு ரூ.250 முதல் ரூபாய் 300வரை விற்பனைக்கு வைத்துள்ளோம். சென்ற ஆண்டு விற்பனை செய்த விலையை விட பெரியளவில் விலை உயரவில்லை என்றாலும், விற்பனை மந்தமாக உள்ளது.

மூலபொருள் விலை உயர்வு

தொழிலாளர் கோபால் கூறுகையில்: ஆற்றில் போதுமான நீரோட்டமில்லை. அதனால் களிமண் கிடைப்பதில் சிரமம். தரமான மண்ணும் கிடைக்கவில்லை. மேலும்  உருப்படிகளை சுட்டுஎடுக்க மட்டை வைக்கோல் விலையும் அதிகமாகிவிட்டது. இருந்தும் இந்த தொழிலை கைவிடாமல் பொங்கலை எதிர்பார்த்து மண்பாண்ட தயாரிப்புகள் சன்னமாக ரெடியாகி வைத்துள்ளோம். இந்தாண்டு பொங்கல் வியாபாரம் நினைத்து பார்த்த அளவில் இல்லை. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளது ஆனால் விற்பனை டல்லாக உள்ளது என்றார்.

ஆரோக்யம் அதிகம்

தொழிலாளர் மோகன் கூறுகையில்: நாங்கள் பலதலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். பெரியளவில் வருமானம் இல்லை என்றாலும், எங்களின் குலத்தொழில் என்பதால் கிடைத்ததை கொண்டு இந்த தொழிலில் இருந்து வருகிறோம். தற்போது மக்கள் உலோக பாத்திரங்களை நாடி சென்றாலும் திரும்பவும், இந்த மண்பாண்ட பொருட்களின் ஆரோக்யத்தை கண்டு திரும்பி கொண்டுதான் உள்ளனர். இதில் எந்தவித ரசாயனமும் கலக்க வில்லை. எல்லாமே இயற்கையை கொண்டே தயாரிக்கப்படுகிறது. அதனால் நீண்ட ஆயுள் வேண்டும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பாரம்பரிய இந்த மண்பாண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி இந்த ஆண்டு சிறப்புடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றார்.

கண்ணியத்துடன் வாழ்க்கை

தொழிலாளர் லலிதா பாஸ்கர் கூறுகையில்:  நாங்கள் சொந்த தொழில் செய்கிறோம் என்ற பெயர் மட்டும்தான், மற்றபடி பெரியளவில் வருமானம் கிடையாது. ஆனாலும் கிடைப்பதை கொண்டு கண்ணியத்துடன் வாழ்க்கையை கடந்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் அடுப்புகள் அதிகளவில் தயாரிப்போம், வெளியூர்களுக்கு மொத்தமாக அனுப்பி வைப்போம். இந்தவருடம் சொல்லும் அளவிற்கு வியாபாரம் கிடையாது. ஆனாலும் இந்த பொருட்களை வருடம் முழுவதும் தடையின்றி தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். குலத்தொழில் நசிந்து போகாமல் காத்து வருகிறோம் என்றார்.

 இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வௌ்ளம், வறட்சி, கஜாபுயல், கொரோனா போன்ற பேரிடர்களால் பெரியளவில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதுதான் படிபடியாக மாறி வருகிறது அதனால் இயல்பு நிலைக்கு ஓரளவு மாறியுள்ளதால் இந்தாண்டு இந்த தொழிலாளர்களின் தொழில் கரும்புபோல் இனிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Tags : Padujor , Muthuppet: In Muthupet, the sale of earthenware products is going on in full swing on the occasion of Pongal festival.
× RELATED பாடாலூர் அடுத்த செட்டிகுளத்தில் பலாப்பழம் விற்பனை படுஜோர்