ஊட்டி நகராட்சி பகுதியில் மார்க்கெட் நடைபாதை ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்

ஊட்டி :  ஊட்டி நகராட்சி பகுதியில் மார்க்கெட் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போதே துவக்கப்பட்ட இந்த மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது.  இந்த மார்க்கெட்டில், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள், பழக்கடைகள் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளே அதிகம் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ள பெரும்பாலானவர்கள் தங்களது கடை முன்புள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

குறிப்பாக, மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ள பகுதிகளில் பெரும்பாலான கடைகள் நடைபாதைகளில் பெட்டிகள் மற்றும் மூட்டைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நடைபாதைகள் நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும், பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இதனை தொடர்ந்து நேற்று நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். இதனால், அனைத்து பகுதிகளிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் மற்றும் பெட்டிகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் நகராட்சி ஊழியர்களே களத்தில் இறங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர், ஊட்டி நகராட்சி மார்க்கெட் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நேற்று மார்க்கெட் நடைபாதைகள் பளிச் என தெரிந்தது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொல்லையின்றி பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Stories: