கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஆற்று பாலம் கட்ட வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இந்த தீவுக்கிராமத்தின் ஒரு பகுதியில் வங்க கடலின் அலைகள் வந்து தொட்டு சென்று கொண்டிருக்கின்றன.மற்றொரு பகுதியை கொள்ளிடம் ஆறு தொட்டு சென்று வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது. இந்த கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து இளந்திரமேடு வழியாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தைக் கடந்து தரை வழியாக சென்று சேர்வதற்கு 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த இந்த தீவு கிராமம் தனி ஊராட்சியாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் மீன் பிடி தொழிலாகும். இங்கு உள்ள வீடுகளை கட்டுவதற்கு இவர்கள் அருகில் உள்ள கோட்டைமேடு கிராமத்தில் உள்ள பழமையான கோட்டை சுவரை இடித்து. அதிலிருந்து செங்கற்கள் எடுத்து படகு மூலம் ஏற்றி சென்று அப்பகுதியில் ஓட்டு வீடுகளை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதி மக்கள் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமப்பட்டு படகின் மூலம் மட்டுமே சென்று வந்தனர். புயல் மற்றும் மழை அதிகமாக இருந்தாலும் இப்பகுதி மக்கள் கொள்ளிடம் சிதம்பரம் மற்றும் சீர்காழி பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் பழையாறு துறைமுகத்திலிருந்து கொடியம்பாளையம் கிராமத்துக்கு தண்ணீரில் படகு மூலம் கடந்து சென்று வந்தனர். கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகே இளந்திரைமேடு கிராமத்துக்கும், கொடியம்பாளையம் கிராமத்துக்கும் இடையே பாலம் கட்டப்பட்டதால் கடந்த 15 வருட காலமாக கொடியம்பாளையம் கிராமத்துக்கு சிதம்பரம் சென்று சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணித்து சென்று வருகின்றனர்.

இருந்தும் நெடும் தொலைவு மற்றும் காலத்தின் சிக்கனம் கருதி சிலர் இன்றும் பழையாறு துறைமுகத்திலிருந்து படகு மூலம் நீர் வழியே இக்கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைசி சனி மூலை பகுதியில் கொடியம்பாளையம் தீவு கிராமம் இருந்து வருவதால், சீர்காழி சட்டமன்ற தேர்தலின் போதும் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற தேர்தலின் போதும் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தான் அவர்களின் முதல் தேர்தல் பரப்புரையை துவங்குகின்றனர்.

 அப்படி தூங்குவதன் மூலம் வெற்றி பெறலாம் என்ற ஐதீகம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே கொடியம்பாளையம் கிராமத்துக்கு இடையே தரைவழி போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கிராமம் குறித்து அப்பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கூறுகையில்,கொடியம்பாளையம் தீவு கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சனிமூலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள அனைவரும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளோம்.கடந்த சுனாமியின் பொழுது பேரழிவை சந்தித்து தங்களது உடைமைகளை இழந்த நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அரசின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்தனர். எங்கள் கிராமத்திற்கு 2006ம் ஆண்டு புதிய பாலம் அமைக்கப்பட்டது. அதனால் நாங்கள் சிதம்பரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. சிதம்பரத்திலிருந்து அடிக்கடி மினி பேருந்துகள் சென்று வருகிறது.

ஆனால் எங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து அதிகமாக இயங்குவதில்லை. எனவே மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

படகும் மூலம் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆற்றில் கடந்துபழையார் சென்று அதன் வழியாக தான் செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் சிதம்பரம் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை பேருந்தில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

சுற்றுலா மையமாக அமைக்க வேண்டும்

கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், கொடியம்பாளையம் தீவு கிராமம் கொள்ளிடம் ஆறு, கடல் பகுதி ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நாங்கள் நினைத்த நேரத்திற்கு வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பிச்சாவரத்தில் இருந்து கொடியபாளையம் கிராமத்திற்கு சாலை வசதி சரியில்லாத நிலையில் உள்ளது.

எனவே சாலையை அகலப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா மையமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: