×

தமிழ்நாடு கடல்சார் பகுதிகளைப் பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாடு கடல்சார் பகுதிகளைப் பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த பயிலரங்கத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து உரையாற்றினார்கள்.

சென்னை, பள்ளிகரனையில் அமைந்துள்ள, ஒன்றிய அரசின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (National Centre for Coastal Research), இன்று (10.01.2023) காலை தமிழ்நாட்டின் கடல்சார் பகுதிகளைப் பயன்படுத்த திட்டமிடுதல் குறித்தப் பயிலரங்கத்தை, அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்கள். தேசிய கடலோர ஆராய்ச்சி மைய (NCCR) இயக்குநர்டாக்டர் எம்.வி.ரமணமூர்த்தி , வரவேற்புரை ஆற்றினார்.

செந்தில் பாண்டியன், இ.ஆ.ப., இணைச் செயலாளர், ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகம், டாக்டர் தீபக் ஆப்தே, மேலாண்மை இயக்குநர், ஸ்ருஷ்டி இயற்கை பாதுகாப்பு அமைப்பு, புனே, டாக்டர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், டாக்டர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை ஆகியோர் பயிலரங்க நோக்கத்தை குறித்து விவரித்து உரையாற்றினார்கள்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, துவக்க உரையாற்றுகையில்:
இந்த பயிலரங்கம் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையும் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது.

தமிழ்நாடு 1076 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் மொத்த கடற்கரையில் 13% சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சோழர்கள் காலத்திலிருந்தே, தமிழ்நாடு கடல்சார்ந்த செயல்பாடுகளில், முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது என்றும்,
மேலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடலோரத்தின் முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

சங்கத்தமிழ் இலக்கியத்தில் ஐந்து திணைகளில் நெய்தல் (கடலும் கடல்சார் இடமும்) கடலோரப் பகுதிகளின் முக்கியத்துவம் மற்றும் மேம்பாடு பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது, நமது முக்கியப் பொறுப்பு மற்றும் கடமையாகும். இம்முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக தெரிவித்தார்கள்.

“கடல்சார் பகுதிகளை திட்டமிடுதல்’‘ என்ற கருத்து மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கங்கள், சுற்றுலா, சுற்றுச்சூழல், தொல்லியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும். மற்ற கடலோர மாநிலங்களை போல் இல்லாமல், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்கள், மீனவர் கிராமங்கள், பெருந்துறைமுகங்கள் மற்றும் சிறுதுறைமுகங்கள், மன்னார் வளைகுடா பல்லுயிர் பெருக்கப் பகுதி, பவளப்பாறைகள் மற்றும் தீவுகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், பறவைகள் சரணாலயங்கள், கடலோரப் பயணிகள் போக்குவரத்து, மிக அருகில் அமைந்துள்ள சர்வதேச கடல் எல்லை போன்றவை உள்ளன.

யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் கருத்துருவாக்கப்பட்ட “கடல்சார் பகுதிகளை திட்டமிடுதல்“ குறித்த புதிய கருத்துக்களை ஈர்க்கும் வகையில், ‘நமது ஆற்றல்மிக்க தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  துறைமுகங்கள், மீன்பிடி பகுதிகள், சதுப்பு நிலங்கள், மணற்குன்றுகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதிகள் போன்றவை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் வளமிகுந்த கடலோரப் பகுதியினை சிறப்பாக நிர்வாகிப்பதற்கு பலதரப்பட்ட பங்குதாரர்கள், பல்துறை நிபுணர்களின் ஒருமித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுகிறது.

கடல்சார்ந்த இடங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பயன்பாடு நிலைத்த மற்றும் பொறுப்புமிக்கதாக இருக்க வேண்டியதை உறுதி செய்வதற்கான உரிய வரைமுறைகள் அவசியமாகிறது. தமிழ்நாடு மாநிலத்திற்கான கடல்சார் பகுதிகளைப் பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த இந்த பயிலரங்கம், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக மற்ற கடலோர மாநிலங்களுக்கு தங்கள் கடல் இடத்தை சிறந்த மற்றும் நிலையான மேலாண்மைக்கு ஒரு முன்னோடியாக விளங்கும் என்று தெரிவித்தார்கள்.

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின், விஞ்ஞானி  டாக்டர் ட்யூன் உஷா அவர்கள், நன்றியுரை ஆற்றியபின், பயிலரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில்,
1) கடல்சார் பகுதி திட்டமிடுதலில் கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை மேலாண்மை (Coastal Protection and Shoreline Management in MSP)
2) கடல்சார் பகுதி திட்டமிடுதலில் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (Environment & CRZ in MSP)
3) கடல்சார் பகுதி திட்டமிடுதலில் மீன்வளமும் சுற்றுலாவும் (Fisheries and Tourism in MSP) ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் பல்வேறு அரசு செயலாளர்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் உரையாற்றினார்கள்.

Tags : Minister ,AV ,Velu ,Tamil Nadu , Tamil Nadu Maritime Region, inaugurated the workshop, Minister AV Velu
× RELATED திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை...