×

36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பு முடிந்து ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி: ரஷ்யா கூறுவது பொய் பிரச்சாரம் என உக்ரைன் மறுப்பு..!!

கிராமடோர்ஸ்க்: 36 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பு முடிந்து ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளனர். கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்க்கில் உக்ரைன் வீரர்கள் தங்கி இருந்த 2 கட்டடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 1,300 வீரர்கள் தங்கி இருந்த கட்டடங்கள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும் 600 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறுவது வழக்கமான பொய் பிரச்சாரம் என உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டார். ஆனால் இது ரஷ்யாவின் ஏமாற்று வேலை என உக்ரைன் கூறியது. ரஷ்யாவின் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை என்றும் உக்ரைன் தெரிவித்தது.

இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் புதினை விமர்சித்தார். இந்தச் சூழலில் ரஷ்யா நிகழ்த்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Tags : Russia ,Ukraine , Russia, missile attack, 600 Ukrainian soldiers, dead
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...