×

வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை ரூ.142 கோடியில் உயர்மட்ட பாலமாகிறது: மாநகராட்சி அதிகாரி தகவல்

வியாசர்பாடி: கணேசபுரம் சுரங்கப்பாதை  ரூ.142 கோடியில்  4 வழிச்சாலை உயர்மட்ட பாலமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் இரு முனைகளையும் இணைக்கும் வழியாக வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதையில் சிறுமழை பெய்தால் கூட சுரங்கப்பாதை மூழ்கி போக்குவரத்து மார்க்கங்களையும் தடை செய்து விடுகிறது. அப்போது வடசென்னை தனித்தீவாக மாறிவிடுகிறது. பெரம்பூர் மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக, வடசென்னையையும், தென் சென்னையையும் இணைக்கும் ஒரே ஒரு மார்க்கமாக வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை மட்டும்தான் உள்ளது. இந்த சுரங்கப்பாதையின் உயரம் மிகக் குறைவாக உள்ளதால் பெரிய வாகனங்களில், பேருந்துகள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து பொன்னேரி நெடுஞ்சாலை, அம்பத்தூர் வழியாக கனரக வாகனங்கள் சுற்றி செல்கிறது.

வட சென்னைக்கு மட்டுமின்றி தென்சென்னைக்கும் தேவையாக அமைகிறது இந்த பாலம். வட சென்னை மக்களுக்கு மட்டுமல்ல, தென் சென்னை மக்களுக்கும் இந்த சுரங்கப்பாதை மிகவும் முக்கியமான சுரங்கப்பாதையாக உள்ளது. தென்சென்னை மக்கள் இதன் வழியாக மட்டுமே மூலக்கடை, மாதவரம், ஆவடி பிரதான சாலைக்கு செல்லலாம். இங்கிருந்து சென்னையின் அனைத்து பகுதிக்கும் செல்லக்கூடிய நெடுஞ்சாலைகள் உள்ளன.  சுமார் 2 லட்சம் மக்கள் நாள்தோறும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த சுரங்கப்பாதை வழியாக பயணம் செய்கிறார்கள். மேலும் சர்மா நகரிலும், கண்ணதாசன் நகரிலும் உள்ள தொழிற்பேட்டைகளுக்கு வேலைக்காக வரும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மழைக்காலத்தில் இந்த சுரங்கப்பாதை முழுமையாக தண்ணீரில் மூழ்கி விடுவதால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வேலை நாட்களில் காலை 10 மணி அளவில் சுரங்கப்பாதையை கடந்து செல்லவே குறைந்தது ஒரு மணி நேரமாகிறது. இதனால், திமுக ஆட்சிக்காலத்தில் வட சென்னையையும் தென் சென்னைனையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை கன்னிகாபுரத்திலிருந்து கட்ட திட்டமிட்டு அதற்காக ரூ.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி வந்தும் இந்த பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டது. மேலும், சென்ட்ரலிருந்து மாதவரம் கணேசபுரம் வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கோயம்பேடு வழியாக செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் 50 வருடங்களான கோரிக்கையை ஏற்று தற்போது கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு பதிலான அந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. இந்த பாலம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். செங்குன்றம், பொன்னேரி, தடா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுலபமாக சென்னை சென்ட்ரலை வந்தடைய முடியும். போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் நேரம் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் மண்டலத்தில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டால் வட சென்னைக்கும், தென் சென்னைக்கும் இடையேயான போக்குவரத்து தடையின்றி நடைபெறும். இதனால், பொருளாதார சமூக ரீதியில் இந்த 2 பகுதிகளுக்கிடையான வேறுபாடுகள் நீங்கும்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வடசென்னையின் முக்கிய சுரங்கப்பாதையான கணேசபுரம் சுரங்கப்பாதை எந்த மழை பெய்தாலும் உடனே மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதற்கு மாற்றாக, தற்போது ரூ.142 கோடியில் 680 மீட்டருக்கு உயர்மட்ட பாலம் அமைகிறது. இதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பாலம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும். இந்த பணிகள் தொடங்கிய 24 மாதங்களில் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் அகலம் 15.20 மீட்டரில் 4 வழிப்பாதையாக அமைகிறது. இதற்காக தனியார் நிலங்களில் 2437 சதுர அடி மற்றும் அரசு நிலமான 194 சதுர அடி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 2631 சதுர அடியில் இந்த பாலம் அமைகிறது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Tags : Vyasarpadi Ganesapuram tunnel , Vyasarpadi Ganesapuram tunnel to become high-level bridge at Rs 142 crore: Corporation official
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...