×

கோடிக்கணக்கான பணத்தை கேட்டு உதவியாளருடன் மோதல்: அதிமுக மாஜி அமைச்சர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்

பண்ருட்டி: கோடிக்கணக்கான பணத்தை கேட்டு உதவியாளருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்தும் அவருடைய உதவியாளர் குமாரும் கடந்த பத்து ஆண்டு காலத்தில் பல்வேறு சொத்துகள் வாங்கியது, பல்வேறு நிலைகளில் பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில சொத்துக்களை உதவியாளரான குமார் விற்று பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வரவு, செலவுகளை முடிக்க அழைத்தும் குமார் வரவில்லை. இந்நிலையில் குமார் தனது மாமனார் ராமச்சந்திரனிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த எம்.சி.சம்பத் சகோதரர் தங்கமணி உள்பட சிலர், ராமசந்திரனிடம் கடந்த வாரம் பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில், 5 பேர் காயம் அடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ராமசந்திரன் பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தங்கமணி, முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிந்து, அதிமுக பிரமுகர் ராஜேந்திரன், ராதா ஆகிய இருவரை கைது செய்தனர். இதனையடுத்து எம்.சி.சம்பத் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். நீதிபதி உத்தரவின்படி நேற்று பண்ருட்டி நீதிமன்றத்தில் எம்.சி.சம்பத் ஆஜராகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,-minister ,Panruti , Confrontation with aide over crores of money: AIADMK ex-minister Panruti appears in court
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...