×

யூ-டியூப் சேனல் பார்த்து வெடிகுண்டுகள் தயாரிப்பு: வாகனம் மீது வீசி சோதித்த 4 சிறுவர்கள் கைது

புதுச்சேரி: யூ-டியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து ஒரு வாகனம் மீது வீசி சோதித்த பள்ளி மாணவர்கள், சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, உருளையன்பேட்டை, கென்னடி நகரில் வசிக்கும் அகஸ்டின் (46) என்பவரது லோடு கேரியர் வாகனம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சாந்தி நகர் விரிவாக்கத்தில் வந்தபோது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வாகனம் மீது வீசியுள்ளனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறவே அகஸ்டின் மட்டுமின்றி அப்பகுதியில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அப்போது 6 பேர் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து உருளையன்பேட்டை போலீசார் வந்து பார்வையிட்டனர். அங்கு வெள்ளை பேப்பர், வெடிமருந்துகள், கூழாங்கற்கள் சிதறிக் கிடக்கவே வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கோவிந்தசாலை, கண் டாக்டர் தோட்டம் பகுதியில் வசிக்கும் 3 மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் 3 சிறுவர்கள் ஒன்றாக சுற்றித் திரிந்து உள்ளனர். தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளில் மீதமிருந்த வெடிமருந்துகளை எடுத்துவந்து யூ-டியூப் சேனலை பார்த்து ஒரு வெள்ளை பேப்பரில் சிறிய கூழாங்கற்களை சேர்த்து பொதிந்து வெடிகுண்டு தயாரித்து, காலி இடத்தில் வீசியுள்ளனர். அது பட்டாசுபோல் வெடித்து சிதறியுள்ளது. அதன்பிறகு 6 பேரும், மற்றொரு நாட்டு வெடிகுண்டை தயாரித்து, அகஸ்டின் லோடு கேரியர் வாகனம் மீது வீசியபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 4 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : YouTube , Making bombs by watching a YouTube channel: 4 boys arrested for trying to throw them on a vehicle
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்