×

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதையின் மிகச்சிறந்த ஆட்சி முறையால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: ஆளுநர் உரையில் பெருமிதம்

சென்னை: சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதையால் கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆட்சி முறையால், இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் பெருமிதத்துடன் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில், 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர், நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. பேரவையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியிருப்பதாவது: தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் மற்ற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், 1960ம் ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின்தங்கி இருந்தது. ஆனால், இன்று அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கு காரணம், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆட்சிமுறை தான்.

மேலும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகாரமளித்து, அவர்களின் நலன் காத்து திராவிட வளர்ச்சிப் பாதையில் இந்த அரசு உத்வேகத்தோடு தொடர்ந்து பீடு நடைபோடும்.
அதேபோல், மாண்டஸ் புயலையும், வடகிழக்குப் பருவ மழையையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட இந்த அரசிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும’ என்ற கலைஞரின்  கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் இந்த அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், அலுவல்மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த வகையில், அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய ‘மாநிலங்களின் நிலை’ என்ற ஆய்வில் சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி உள்ளது. இந்த சாதனை, ஆற்றல்மிக்க தலைமைக்கும், சமூகநீதியின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும். இதேபோல், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து நல்லாட்சியை வழங்கிட தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

அதன்படி, நடப்பாண்டில் ‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் இதுவரை 17.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அதில், 16.28 லட்சத்துக்கும் மேலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தமிழ்மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழ்ப் பண்பாட்டினைப் பேணிக்காக்க, ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அயலகத் தமிழர்களின் நலனைக்காக்கும் வகையில் அயலகத் தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆண்டுதோறும் ஜன.12. தேதி ‘அயலகத் தமிழர் தினமாக’ தமிழக அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

* நாட்டிற்கு முன்னோடி முதல்வரின் காலை உணவுத்திட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் கூறியிருப்பதாவது: வெறும் வயிற்றுடன் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த இயலாத நிலை நீங்கிட, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில். முதற்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1.14 லட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெறுகின்றனர். மதிய உணவுத் திட்டம் போன்றே இத்திட்டமும் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். என்றார்

* நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஆளுநர் உரையில் வலியுறுத்தல்
ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முறையானது, கிராமப்புற ஏழை மாணவர்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என கருத்தில் கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இச்சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.

அதேபோல், அதிகரித்து வரும் தொற்று அல்லாத நோய்களின் பாதிப்பை போக்கும் வகையில், மக்களின் வீட்டிற்கே சென்று கட்டணமின்றி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், தற்போது வரை 1.01 கோடி மக்கள் தங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்த முதல் 48 மணி நேரத்தில் அவசர மருத்துவ சேவையை அனைவருக்கும் கட்டணமின்றி வழங்குவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’  என்ற உன்னதத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலமெங்கும் உள்ள 679 மருத்துவமனைகளில் இதுவரை ரூ.1.35 லட்சம் விபத்துக்குள்ளானவர்களுக்கு ரூ.120.58 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu ,India ,Governor , Tamil Nadu is a pioneer state in India due to its excellent governance system of social justice, equality and self-respect: Pride in Governor's speech
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...