தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேச பேட்டி

சென்னை: தமிழக அரசை செயல்பட விடாமல் தடுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் அவர்கள் அளித்த பேட்டி: செல்வபெருந்தகை (காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர்): ஆன்லைன் ரம்மிக்கு எதிராக  தமிழக  பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் ஒப்புதல் அளிக்காததால் சட்டத்தை முழுமையாக  நிறைவேற்ற முடியவில்லை. இதுவரை 10 உயிர்கள் தன்னைத்தானே மாய்த்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர் பொறுப்பு ஏற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை, நோக்கத்தை  புரியாமல் விளையாடி கொண்டிருக்கிறார். சட்டமன்ற கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தமிழகத்தின் மீது பற்றுள்ளவர்கள். தமிழகத்தை கட்டி காப்பவர்கள். தமிழ்நாட்டின் மீது  அக்கறை உள்ளவர்கள் எல்லாம், ஆளுரை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இது தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான போராட்டமாக தொடரும்.

சதன் திருமலைக்குமார்(மதிமுக): ஆளுநர் ரவியை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அவரின் செயல்பாடுகளை நாங்கள் புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்ற அவரின் ஆணவ போக்கை நாங்கள்  கண்டிக்கிறோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று எண்ணற்ற பெரியவர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். அதை மதிக்காத இந்த ஆளுநரை நாங்கள் வெளியேற்ற வேண்டும் என்று வேண்டி அவரை நாங்கள் புறக்கணித்து  நாங்கள் வெளியே நடப்பு செய்து இருக்கிறோம். ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலியாக இருக்கிறார். எனவே, அவரை புறக்கணித்து வெளியே வந்திருக்கிறோம்.

தளி ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ்  மாளிகையாக்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழக கலாசாரம், பண்பாட்டிற்கு எதிராக  ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். எனவே, தமிழக ஆளுநரை திரும்ப பெற  வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஆளுநர் நடவடிக்கையை கண்டித்து  சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஆளுநர்  உரையை கண்டித்து, தமிழக ஆளுநராக செயல்படுகின்ற ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை  படிப்பதற்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை என்ற முறையில் நாங்கள் எல்லாம்  வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஒரு ஆளுநர் என்பவர், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்பவராக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இருக்கின்ற ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ், பிஜேபி ஊழியராக இன்றைக்கு செயல்படுகிறார். தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுகின்ற, தமிழ்நாட்டிற்கே உகந்தவர் அல்ல. தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுவராக ஆளுநர் இருக்கிறார். எனவே, ஆளுநரை ஒன்றியஅரசு தமிழகத்தில் இருந்து  திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். தமிழக ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

ஜவாஹிருல்லா(மமக): தமிழக  அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை வரவேற்கிறோம். ஆனால், மரபு வழியாக  சட்டமன்றத்திலே வாசிக்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை புறக்கணிக்கிறோம்.

வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி): ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும், தமிழக மக்கள் வாக்களித்த அரசாங்கத்திற்கும் நேர் எதிராக செயல்பட்டு வரும் ஆளுரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் அல்லது  டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதேபோல, (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் சிந்தனை செல்வன் ஆகியோர் பேசினார். ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழக கலாசாரம், பண்பாட்டிற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

Related Stories: