×

மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கையால் சென்னையில் ஆதாயக்கொலை கொள்ளை, வழிப்பறி குறைந்தது: 165 வெளி மாநில குற்றவாளிகள் உட்பட வீடு புகுந்து திருடும் 5,636 பேர் கைது

சென்னை: மாநகர காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் சென்னையில், கடந்த 2022ம் ஆண்டு ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், 165 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட வீடு புகுந்து திருடும் 5,636 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின், பதவியேற்ற பிறகு காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு கடைப்பிடிப்பதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. சமூக விரோத செயல்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

முதல்வரின் உத்தரவுப்படி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னையில் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காப்பதில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தும், செயல்படுத்தியும் வருகிறார். குறிப்பாக, 2021ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு ஆதாயக்கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021ம் ஆண்டில் முன்விரோத கொலை 36 நடந்துள்ளது. 2022ம் ஆண்டில் அது 20 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, 2022ம் ஆண்டு மயிலாப்பூரில் ஆடிட்டர் குடும்ப கொலை வழக்கில், போலீசார் குற்றவாளிகளை 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.

அதேபோல், அரும்பாக்கம் வங்கியில் 31.7 கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கில், அதிரடியாக செயல்பட்டு, முன்னாள் ஊழியர் மற்றும் கும்பலை கூண்டோடு கைது செய்தனர். அதேபோல், சென்னை மாநகர காவல் எல்லையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் 12 காவல் மாவட்டங்களிலும் துணை கமிஷனர்கள் தலைமையில் ‘ரவுடிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கை’ என்ற திட்டத்தின் கீழ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் ஏ.பிளஸ், ஏ, பி மற்றும் சி பிரிவுகளாக வகைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் தலைமையில் சென்னை மாநகர காவல் எல்லையில் தாதாக்கள், ஏ பிளஸ் பிரிவு ரவுடிகள் அவர்களின் குழுக்களை கண்காணித்து, குற்றம் நடப்பதற்கு முன்பே தகவல்களை சேகரித்து உள்ளூர் போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், ஆயுதம் பயன்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகளான சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, எண்ணூர் தனசேகரன், ஆற்காடு சுரேஷ், பி.டி.ரமேஷ் உள்ளிட்ட 74 கொடுங்குற்றவாளிகள் சிறையில் உள்ளனர்.

கடந்த 8.5.2021ம் தேதி முதல் நடத்தப்பட்ட வேட்டையில் சென்னை மாநகரம் முழுவதும் 547 ரவுடிகள் என மொத்தம் இதுவரை 3,610 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து வீட்டின் பூட்டை உடைத்து திருடுபவர்கள் மற்றும் வாகன திருடர்கள் உட்பட 5,636  பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 165 பேர் வெளி மாநிலயத்தை சேர்ந்தவர்கள், 633 பேர் சிறுவர்கள். இதுதவிர 270 புதிய கொள்ளையர்கள் உட்பட 1,701 குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை குறைப்பதற்கு மாநகர காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் விபரம்
1. சிசிடிவி மூலம் விரைவாக குற்றங்களை கண்டுபிடிக்கவும், தண்டனை பெற்று தர சிறந்த சாட்சியங்களை அளிக்கவும், பொது இடங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றையும் ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்பான நகரின் திட்டதின் கீழ் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. 2021-22ம் நிதி ஆண்டில் 11,468 சிசிடிவி கேமராக்களை பழுது பார்த்தல், பராமரிப்புக்காக ரூ.1.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3. பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் முகத்தை தெளிவாக படம் பிடிக்கும் மென்பொருள் பொருத்தப்பட்ட 150 கேமராக்கள், தானியங்கி மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களில் பதிவு எண்களை படம் பிடிக்கும் 375 கேமராக்கள் மற்றும் 2,250 இன்டெக்ஸிங் கேமரா அமைக்கப்பட உள்ளது.
4. பெருநகர காவல் பணி திட்டத்தின் கீழ் முகத்தை தெளிவாக படம் பிடிக்கும் 70 கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனத்தின் பதிவு எண்களை படம் பிடிக்கும் 170 கேமராக்கள் மற்றும் 1000 இன்டெக்ஸின் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.
5. ரோந்து காவல், வாகன சோதனைகள் புலப்படும் காவல் பணி, குற்றம் அதிகம் நடைபெறும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து.
6. சென்னையில் ஏற்கனவே நிறுவப்பட்ட 60,997 சிசிடிவி கேமராக்களின் அமைவிடத்தை அறிய, பிரத்யேக அடையாள குறியீட்டுன் ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளது.
7. 2020ம் ஆண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 334 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு 270 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு ரவுடிகள் உட்பட 424 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.
8. பாதுகாப்பான நகரம் திட்டதின் கீழ் 1,750 இடங்கள் தேர்வு செய்து 5,250 சிசிடிவி கேமராக்களும், பெரு நகர திட்டத்தின் கீழ் 980 இடங்கள் தேர்வு செய்து 2,939 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.
9. பெரு நகர மற்றும் பாதுகாப்பான நகரம் திட்டங்களின் கீழ், விளம்பரதாரர்கள் மூலமாக மேலும் 20 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மேகராக்களை பராமரிப்பதற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த கொலைகளின் விபரங்கள்
ஆண்டு    கொலை    ஆதாய கொலை    கொள்ளை    வழிப்பறி    கொடுங்களவு    சாதாரண களவு
2020    93    2    17    470    30    472
2021    94    10    15    253    29    430
2022    97    4    11    230    35    503

Tags : Chennai , City police crackdown on robbery, burglary reduced in Chennai: 5,636 burglars arrested, including 165 out-of-state criminals
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...