×

வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் கைத்தல சேவை நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா 23ம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான கடந்த 1ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். 2ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட எகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ராப்பத்து நாட்களில் கோயிலின் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளான நேற்று நம்பெருமாள் கைத்தல சேவை நடந்தது. இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை உயபகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவையும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று (9ம் தேதி) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனுமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணி முதல் 9.30 மணி வரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறார். வேடுபறி உற்சவத்தையொட்டி இன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.தொடர்ந்து 10ம் திருநாளான நாளை மறுநாள்(11ம் தேதி) தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடக்கிறது. இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Tags : Vaikunda Ekadasi Festival ,Tirumangai King Vedupari ,Srirangam Ranganatha Temple , Vaikunda Ekadasi Festival: Rangam Ranganatha Temple Vedupari of Thirumangai Mannan
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி...