மதுரை மாநகராட்சி தயாரித்து விற்பனை செய்யும் மலிவு விலை இயற்கை உரத்திற்கு அமோக வரவேற்பு

*அதிகம் கொள்முதல் செய்யும் விவசாயிகள் *உர மையங்களை அதிகரிக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாநகராட்சி விவசாயிகளுக்காக இயற்கை உரங்களை தயாரித்து மலிவு விலையில் வேளாண்மைத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு விவசாயிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச்செல்கின்றனர். இதனால் உர மையங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் மேற்கு ஆகிய 5 மண்டலங்ளை கொண்டுள்ளது.

மொத்தம் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் பரப்பளவு 51.82 சதுர கி.மீயில் இருந்து 147.99 சதுர கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. இதன்காரணமாக மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 14.70 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை என்பது மதுரை மாநகராட்சியின் முக்கிய பணிகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் தோராயமாக 650 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மாநகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.

இது, தனிநபருக்கு 425 கிராம் என்ற அளவில் உள்ளது. பெருகி வரும் மதுரை மாநகரத்தின் மக்கள் தொகை மற்றும் தினசரி நகருக்குள் வந்துசெல்லும் மக்கள் எண்ணிக்கையே குப்பைகள் அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது.மதுரை மாநகராட்சி, தற்போது குப்பை சேகரித்தல், வீடுதோறும் சென்று சேகரித்தல் மற்றும் குப்பைகளை பிரித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. தினந்தோறும் குப்பை சேகரிக்கும் முதன்மை பணியில் 2,800 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்ததாக 150 வாகனங்களில் பகுதி வாரியாக சென்று வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் பகுதிகள், குடிசைப்பகுதிகள் ஆகிய இடங்கில் குப்பைகளை சேகரிக்கின்றனர்..

இந்நிலையில், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சல் அதிக அளவில் கிடைக்கிறது. விலங்குகளின் கழிவு, இலைகள் போன்றவைகளை மக்கச்செய்து, அவற்றை இயற்கை உரமாக மாநகராட்சியே தயாரித்து வருகிறது. இதன்படி மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளைக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை எளிதாக்கும் வகையில் வார்டு பகுதிகளில் திடக்கழிவுகளை சேகரித்து உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மொத்தம் 41 மையங்கள் ரூ.33.50 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டது. இந்த 41 மையங்களிலும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது.

குறிப்பாக தத்தனேரி, மேனேந்தல், திருப்பரங்குன்றம், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் கோச்சடை பகுதியில் 2 மையங்களும், சேக்கிழார் தெரு உள்ளிட்ட இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களில் 44 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் கழிவுகளை நாளொன்றுக்கு 25 டன் வீதம் பெற்று உரமாக்கம் செய்யப்படுகிறது. இம்மையங்களை கற்றியுள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று கழிவுகளை தரம் பிரித்து பேட்டரி வாகனங்கள் உதவியுடன் பெறப்படுகிறது. இதுதவிர, கழிவு நீரேற்று நிலையங்கள், மயானங்கள், குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நுண்ணுயிர் உர மையம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்படுகிறது. குப்பைகள் உரமாக மாற 10 முதல் 15 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இயற்கை உரங்களை வாங்கி வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்தவர்களும் பயன்பெறலாம். வேளாண்மைத்துறை மூலம் மலிவு விலையில் மாநகராட்சி தயாரிக்கும் இயற்கை உரம் விற்கப்படுகிறது. இதனை அதிக அளவில் விவசாயிகள் வாங்கிச்செல்கின்றனர்’ என்றார்.

சமூக ஆர்வலர் ராஜேஷ் கூறுகையில், ‘இயற்கை உரம் தயாரிக்கும் மையங்களை அதிகரிக்க வேண்டும். இதனை பராமரித்து 100 வார்டுகளிலும் மையங்களில் அதிகளவில் இயற்கை உரங்களை தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட வேண்டும். வெளிமார்க்கெட்டில் இயற்கை உரத்தின் விலை அதிகமாக உள்ளது. இதற்கிடையே மாநகராட்சி மலிவு விலையில் உரம் வழங்குவது மிகவும் பாராட்டுதலுக்கு உரிய நடவடிக்கை என்றார்.

Related Stories: