மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: கவர்னர் உரையில் அரசு உறுதி

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையையொட்டி,  மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். அந்த சாலையும் 4  வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகர பகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டம் அச்சாணியாக விளங்கும் என்று கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஆற்றிய உரை: தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக மாநிலத்தில் உள்ள புத்தொழில்களுக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. மே 2021 முதல் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் புத்தொழில்களுக்கு உதவ 30 கோடி ரூபாய் சிறாப்பு நிதி அரசால் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிற்சார்ந்த பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கற்கும் கல்விக்கும் தொழிற்துறைகளின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புர குடியிருப்பு பகுதிகளிலும் சமமான முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன் ‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.  பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை அரசு மீட்டெடுத்து வருகிறது. முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுபிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல் நகர்ப்புர பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 4 ஆண்டுகளில் 20,990 கி.மீ நீளமுள்ள நகர்ப்புர சாலைகள் ரூ.9,588 கோடி  செலவில் மேம்படுத்தப்படும் என  சென்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். அந்த சாலையும் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகர பகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டம் அச்சாணியாக விளங்கும். ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5,582 கோடி மதிப்பீட்டில் 2,263 புதிய பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதன் மூலம் புறவழிசாலைகள் அமைத்தல்.

ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டன. மகளிர் கட்டணமில்லா பயணம் திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 36 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு பெண்ணும் மாதத்திற்கு 888 ரூபாய் அளவிற்கு சேமிக்கின்றனர் என மாநில திட்ட குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் 2,213 பி.எஸ்-VI பேருந்துகளுள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கே.எப்.டபுல்யூ நிதியுலும், 1000 பி.எஸ்-VI பேருந்துகள் மாநில அரசு நிதி உதவியிலும் கொள்முதல் செய்யப்பட்டு நடப்பாண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 63,246 கோடி ரூபாய் மதிப்பில், 118,9 கி.மீ. நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலில்ன் இரண்டாம் கட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: